இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து துறைகளில் தமிழ் மொழிக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற, கருத்து தற்போது தீவிரமடைந்து வருகிறது. அரசுப் பணி முதல் கோவில் குடமுழுக்கு வரையில், தமிழ் மொழியை முதன்மையாக பின்பற்ற பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு, தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கும் தமிழில் நடைபெற்றது.
இந்நிலையில், கரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் என்பவர், கரூர் கல்யாணபசுபதிஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவில் நிர்வாகம் பதில் தராததால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நாளை (டிச.4) நடைபெற உள்ள கரூர் கல்யாணபசுபதிஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிப்படி அதாவது தேவார திருவாசம் ஒதி நடத்த உத்தரவிடக் கோரி குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், குடமுழுக்கு விழா நடைபெறும் போது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளனர். சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளில் குடமுழுக்கு நடத்துவதில் ஆட்சேபம் இல்லை எனவும், அதேசமயம் குடமுழுக்கின் போது இனிவரும் காலங்களில் தமிழ் மொழி கட்டாயம் வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழிலில் குடமுழுக்கு நடத்தாவிடில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது. தஞ்சை பெரிய கோயில் நிகழ்வுக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா என உயர்நீதிமன்றம் கேட்டது.