பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறும்போது, “கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களோடு கருத்துக் கேட்கக்கூடிய கூட்டம் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதன் அடிப்படையில் தமிழக அரசு பெரும்பான்மையான முடிவுகளுக்கு எற்றவாறு வருகிற 16-ம் தேதி அன்று பள்ளி திறக்குமா? இல்லையா? என்று தெரிய வரும் என்று அறிவித்து இருக்கிறது.
இப்படி இருக்க கூடிய சூழலில் தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினரும், அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.கடந்த 7 மாதங்களாக கொரோனாவை கட்டுப்படுத்தும் பணி தமிழக அரசுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது.இருப்பினும் தமிழக அரசு சுகாதாரத்துறையின் உயர் பணியினால் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி கொரோனாவை குறைக்க கூடிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஒருபுறம் பண்டிகை காலம், மறுபுறம் மழைக்காலம். இந்த இக்கட்டான சூழலில் பெற்றோர்களுடைய மனநிலை, கல்வி கூடங்களை திறக்க ஆதரவும், எதிர்ப்பும் கூடுதலாகவோ, குறைந்தளவோ சதவிகிதம் இருந்தாலும் கூட, சுகாதார நலன் கருதி மக்களின் அச்சத்தை போக்க, மாணவர்கள் பாதுகாப்பை கருதி தற்பொழுது தமிழக அரசு கல்வி கூடங்களை திறப்பதை தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கூட பள்ளி, கல்லூரிகள் திறந்ததன் விளைவாக ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விஷப்பரிட்சை வேண்டாம். எனவே தமிழக அரசு, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதை தள்ளிப் போட வேண்டும்” என்றார்.




