நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் சரி பார்க்க வேண்டும்.
பயன்படுத்தப்படாத செறிவூட்டிகள் பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசரக்கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும், N95 முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகளையும் மதிப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள், பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும். கொரோனா வார்டுகளில் கூடுதலாக படுக்கைகளின் இருப்பு வைத்திருக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.