தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இதனை யொட்டி தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.மழை முன்னெச்சரிக்கை பற்றி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழையின் போது தான் தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்கின்றது. இந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தின் இயல்பான மழை அளவில் 47.32 சதவீத மழை கிடைக்கிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் 16-ந்தேதி வரை இயல்பாக கிடைக்க வேண்டிய 287.9 மில்லி மீட்டர் மழை அளவில் 180.7 மில்லி மீட்டர் மழை மட்டுமே கிடைத்துள்ளது. இது இயல்பான மழையளவை விட 37 சதவீதம் குறைவாகும்.
தற்போது வரை சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் சற்று இயல்பான அளவும், 31 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 4,133 பகுதிகள் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டு. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கு சுமார் 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.
பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பேரிடர் காலங்களில் உடனடியாக செயல்பட 43,409 முதல்நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர் என்றும் கூறினார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அறிவுரை வழங்க அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவசர தொடர்புக்கு மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது தற்போது பெய்து வரும் மழையால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து வருவாய்துறை அலுவலர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி விட்டால் உபரிநீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினார் பருவமழையை எந்தவித சேதமும் இன்றி எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று இவ்வாறு அவர் கூறினார்.