ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.303 கோடி செலவிடப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக குடியாத்தம் பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படும். இது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும்.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை. ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால் 26 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இங்கும் அதுபோல நடைபெறக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த உடன், பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை ஆகியவை கலந்து ஆலோசித்து முதல்வர் மூலம் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்.
வயது வரம்பு :
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத 40 வயது என்பது அனைவரும் ஆலோசித்து எடுத்த முடிவாகும். எனவே, இதை பரிசீலினை செய்ய வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.