மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் கோவில் வளாகத்திற்குள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து (இன்று) ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அமல் படுத்தியுள்ளது. மேலும், திருவிழா மற்றும் மத சம்பந்தப்பட்ட கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே சென்னையை தொடர்ந்து மதுரையில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கொரோனா பாதித்த தெருக்களை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில் மதுரை சித்திரை திருவிழா நடைபெறுமா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து விளக்கமளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். அதில், பொதுமக்கள் பாதுகாப்பு நலன்கருதி கோவில் திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
Read more – டெல்லியில் கொரோனாவின் கொடூர தாண்டவம்.. காலவரையின்றி அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு..
தொடர்ந்து, மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் கோவில் வளாகத்திற்குள் நடைபெறும் என்றும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.