எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களிடம் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இன்று காணொலி காட்சி மூலமாக விசாரணை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினையடுத்து அ.தி.மு.க கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்த நிலையில் தான் தீடிரென எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் பதவி வகிப்பார் என்றதும் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டது. தர்யுத்தம் என்ற தொடங்கிய ஓபிஎஸ் எடப்பாடி அரசுக்கு எதிராக செயல்பட்டுவந்தார். தற்போது ஒற்றுமையுடன் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி கடந்த 2017 ம் ஆண்டு இரண்டு அணியாக செயல்பட்டது.
இதன் காரணமாக தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பு நடைபெற்ற போது துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாால் சில மாதங்கள் மட்டுமே கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் மீண்டும் ஆகஸ்ட் மாதம் இரு அணியும் ஒன்றாக இணைந்து விட்டது. இதன் காரணமாக எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கவில்லை.

இதற்கிடையில் தான் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டுமென்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், ரங்கசாமி ஆகியோரும் வழங்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் 11 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் கோரும் மனு மீது சபாநாயகர் எவ்வித உத்தரவும் பிறபிக்கவில்லை என்பதால், சபாநாயகர் அதிகாரத்தில் தலையிடவோ, முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. இதோடு 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க கோரிய மனுவினையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தான் திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, சபாநாயகர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கமுடியாது எனவும் சபாநாயகரே உரிய முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தமிழகம் முழுவதும் கொரோனாவின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களிடம் இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்திய பின்னர், எம்.எல்ஏகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



