தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை வலியுறுத்தி கடந்த 2018 மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து 2018 மே 28-ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.
மூடப்பட்ட ஆலையை திறக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. ஆலையை திறக்கக் கூடாது என, பல தரப்பினரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய பெஞ்ச் இன்று காலை தீர்ப்பளித்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறி வேதாந்தா குழுமத்தின் அனைத்து மனுவையும் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளைக் கொடுத்தும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.