கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், தென்மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதன் ஒருபகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 275 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடையநல்லூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 82.27 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்பதோடு, மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் எனவும்,
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.