கட்டணம் செலுத்தியவர்கள் அரியர் தேர்வில் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், 2 லட்சம் தரமற்ற பொறியியல் பட்டதாரிகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல் மற்றும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று கல்லூரி இறுதியாண்டு செமஸ்ர் தேர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு செய்தது.
அதைதொடரத்து, அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கபடும் என சமீபத்தில் தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பால், தரமற்ற பொறியியல் பட்டதாரிகள் உருவாக வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தற்போது 4 லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் அரியர் வைத்துள்ள நிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்களில் 2 லட்சம் பேர் இறுதி தேர்வை மட்டும் எழுதிவிட்டு பொறியியல் பட்டம் பெற உள்ளனர்.
மேலும் பல மாணவர்கள் 10க்கு மேற்பட்ட பாடங்களில் அரியர் வைத்துள்ளனர். அதிலும் பெரும்பாலான பாடங்களில் மாணவர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தியதால், இந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட உள்ளது.
இதனால் தரமற்ற பொறியியல் பட்டதாரிகள் உருவாகும் நிலை ஏற்படும் என்றும், இதுபோன்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் பெரிதளவு பாதிப்பு ஏற்படும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல அரியர் மாணவர்களை நேரடியாக தேர்ச்சிப் பெற வைக்கும் நடவடிக்கை பல்கலைக்கழகத்தின் தரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அதன் நம்பகத்தன்மையையும் மோசமாக பாதிக்கும் என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.




