பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவராக டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வானதி சீனிவாசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள வானதி சீனிவாசனை, தேசிய மகளிரணித் தலைவராக பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வானதி சீனிவாசன் தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் தலைவியான விஜய் கட்டாரி முறைப்படி பதவியை ஒப்படைக்க, வானதி சீனிவாசன் தனது இருக்கையில் அமர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பேசிய வானதி சீனிவாசன், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி உள்ளதாகவும், பா.ஜ.க. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.
என்னால் சாதிக்க முடியும் என்று நம்பி இந்தப் பதவியை வழங்கியுள்ளதால், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நிச்சயம் கடினமாக உழைப்பேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழர் பெருமைகளையும், தமிழின் சிறப்புகள், தமிழர்களின் பாரம்பரியம் அனைத்தையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுக்குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், “ கட்சியின் சாதாரண தொண்டரும் உயர்நிலைக்கு வர முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இன்று தேசிய மகளிர் அணி தலைவராக புது தில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டேன் ” என பதிவிட்டுள்ளார்.
தேசிய அளவில் பொறுப்பேற்றுள்ள வானதி சீனிவாசனுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
வானதி சீனிவாசன்:
- வானதி சீனிவாசன் ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார்.
- தனது தொழில் வாழ்க்கையை 1993-ஆம் ஆண்டு தொடங்கினார்.
- தெற்கு ரயில்வே மற்றும் மத்திய அரசின் நிலையான ஆலோசகராகவும் இருந்தார்.
- தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில செயலாளராக இருந்தார்.
- மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
- 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார்.