அனல் பறக்கும் தேர்தல் களத்தில் சிதம்பரம் ரகசியம் போல் தன்னிடமும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் நடிகை குஷ்பு திசைத்திருப்பியுள்ளார்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து வீதி வீதியாக செல்லும் குஷ்பு தனக்கான வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் வழியில் சிறுவர்களுடனும், பெண்களுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பி எடுத்தப்படி வாக்கு சேகரிக்கும் குஷ்பு டீ போட்டும், தோசை சுட்டுகொடுத்தும் வாக்கு வேட்டை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம், கங்கைபுரம், அபிபுல்லா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக நடந்து சென்று அனைவரிடமும் வாக்கு சேகரித்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். சிறுவன் ஒருவன் குஷ்புவுக்கு கிரீடம் அணிவிக்க அதனை அன்புடன் வாங்கி கொண்டார். ஆளுயர மாலையை தொகுதி மக்கள் அணிவித்து பூமழை தூவ குஷ்புக்கு தான் வெற்றி என்பது நிதர்சனமான உண்மையாகியது.
இந்த நிலையில் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, திமுகவில் இருந்த போது 2010ம் ஆண்டு அக்கட்சி தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டதற்காக திமுகவினரே தனது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும், சேலையை இழுத்து அசிங்கப்படுத்தியதாகவும் கூறினார். மேலும், தாக்குதல் நடத்துவோரை தடுக்கும்படி கூற ஸ்டாலினை தொடர்பு கொண்டபோது அவர் சாப்பிட்டு கொண்டிருப்பதால் யாரையும் சந்திக்க முடியாது எனக் கூறியதாக குற்றம்சாட்டினார்.
”ஒரு பெண் பிரச்சனை என்று வரும்பொழுது சாப்பாடு தான் முக்கியம் என இருந்த ஸ்டாலினால், தமிழக பெண்களுக்கு எப்படி நன்மை ஏற்படும்” என கேள்வி எழுப்பிய குஷ்பு இறுதியாக ட்விஸ்ட் ஒன்றை வைத்தார். சிதம்பரம் ரகசியம் போல் திமுகவில் இருந்து விலகியதற்காக காரணம் குறித்து தன்னிடம் ஒரு ரகசியம் இருப்பதாகவும், தேர்தலில் வெற்றிப்பெற்றப்பின் அந்த ரகசியத்தை அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார்.