கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு காருக்கு அடியில் அமமுகவினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாருக்கு வெற்றி பெறுவார்கள் என்று தமிழகமே உற்றுநோக்கி வருகிறது. தற்போது, நேற்றிரவு கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மந்திதோப்பு சாலை, அன்னை தெரசா நகர் பகுதி வழியாக அவரது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தென்மண்டல செயலாளர் மாணிக்கராஜா வருகை புரிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது வருகையை வரவேற்கும் விதமாக அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்தநிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கார்வரும் பொழுது அதற்கு அடியில் வெடித்ததால் வெடித்த புகைக்குள் கார் சிக்கிக் கொண்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அமைச்சரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். அதிமுக, அமமுக தொண்டர்கள் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானபோது காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் சுமுகமாக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.




