கும்பகோணத்தில் 2000 ரூபாய் போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் :
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது. ஏற்கனவே, தமிழகத்தில் இதுவரை 445 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு பொதுமக்கள் ரூபாய் 2000 மதிப்புள்ள டோக்கனை வைத்துக்கொண்டு இலவசமாக பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கடையின் உரிமையாளர் ஷேக் அகமது எதுவும் புரியாமல் பொதுமக்களிடம் டோக்கனுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அடுத்தடுத்து வருவதால் மளிகைக்கடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கடையின் கதவில் நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் யாரிடம் கேட்பது என்ன பண்ணுவது என்று தெரியாமல் திரும்பி சென்றுள்ளனர். அரசியல் கட்சியின் ஏமாற்றுத்தனமும், மக்களின் ஏமாளி தனமும் இதில் இருந்தே தொடங்கிவிட்டது.