நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த ரஜினிகாந்த், உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அரசியல் களத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார். ஆனாலும் அரசியலுக்கு வராமலே, மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் :
“ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ரஜினி நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன். நண்பர் என்பதால் தேர்தலில் ஆதரவு கோருவேன். ரஜினியின் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றமா என்ற யுகமான கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பவில்லை.
Read more – கமல்ஹாசனிடம் இருந்து காப்பி அடிக்கிறார் ஸ்டாலின் : அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்
ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. நான் நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன்” என்றார்.