அதிமுக வேட்பாளர் பட்டியலில் தனக்கு இடம் கிடைக்காததற்கு கே.சி.வீரமணியை காரணம் என்று அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி :
அதிமுக சார்பில் கடந்த 10 ம் தேதி 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தற்போதைய அமைச்சர்களான நிலோபர் கபில், எஸ்.வளர்மதி, பாஸ்கரன் ஆகியோருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து வாணியம்பாடி திரும்பிய தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ரகசிய உடன்பாடு உள்ளது. அவர்களுக்கு ‘மாமன்’, ‘மச்சான்’ உறவு இருப்பது தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே தெரியவந்துள்ளது.
திமுகவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்காக இப்படி பொய் சொல்கிறார்கள். காலையில் இருந்து எனக்கு போன் செய்து 10 கட்சிகள் மேல் என்னை அழைத்தார்கள், ஆனால் நான் ஒருபோதும் கட்சி மாறமாட்டேன். அந்த தவறை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். அம்மா கட்சிக்காக விசுவாசமாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.




