நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி ஒன்று மட்டும் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வருகிறது.
அதேபோல், இந்த சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கிறது. இந்தநிலையில், நேற்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்தார்.
மேலும், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடப்போவதாக தெரிவித்தார். பெண்களுக்கு சம உரிமை அளிக்கவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு 50% பெண்களும், 50% ஆண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு 117 இடங்களில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
Read more – திமுக ஆட்சிக்கு வந்தால்… ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகள்….
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மை அரசு பணியாக மாற்றப்படும் என்றும், படித்தவர்களுக்கும் விவசாயம் வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு கண்டிப்பாக ஓய்வுதியம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை வழங்குவோம் மற்றும் பிளாஸ்டிக்கு பயன்படுத்த முழு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.