வேளச்சேரி 92 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குபதிவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 6 ம் தேதி 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அன்றைய நாளில் வேளச்சேரி தொகுதிக்கு உள்ள வாக்குச்சாவடி எண் 92 ல் வாக்குப்பதிவு முடிந்ததும், ஓட்டுச்சாவடி மையத்தில் இருந்து 3 ஊழியர்கள் சேர்ந்து, இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு வி.வி.பி.ஏ.டி., இயந்திரம் ஆகியவற்றை, இரு இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து சென்றுள்ளனர்.
அப்பொழுது அதை பார்த்த பொதுமக்கள் மடக்கி விசாரித்தபோது, இயந்திர கோளாறு காரணமாக எடுத்து சென்றதாக தேர்தல் அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றது சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில் அந்த 3 ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா விளக்கமளித்தபோது, இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்து பழுதாகி போனதால் மாற்றப்பட்டதாகவும், மறுதேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 14.04.2021!!!
இந்தநிலையில், வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92 ல் வரும் 17 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.