கூகுள் மேப் செயலி ‘ஸ்ட்ரீட் வியூ’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சென்னை உள்பட 10 நகரங்கள் இந்த அம்சத்தில் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக கூகுள் மேப் செயலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்று முதல் கூகுள் மேப் செயலியில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட இடங்களின் தெளிவான புகைப்படங்கள், பயனர்களின் வசதிக்காக இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், புனே, நாசிக், வதோதரா, அஹமத்நகர், அமிர்தரஸ் உள்ளிட்ட நகரங்கள் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நகரங்களில் சுமார் 1.5 லட்சம் கி.மீ தூரத்தை புகைப்படங்களாக பார்க்க முடியும்.இது உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் கூகுள் மேப் செயலி ‘ஸ்ட்ரீட் வியூ’ அம்சத்தை அறிமுகம் செய்வதற்கு ஆரம்ப காலகட்டத்தில் மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-பா.ஈ.பரசுராமன்.