நெல்லையில் வெடிகுண்டு வீசி தாக்கி, இரண்டு பெண்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள. மறுகால்குறிச்சி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் சண்முகத்தாய்(48), சாந்தி(45).
இன்று பிற்பகல் அவர்களது வீட்டை முற்றுகையிட்ட 10 பேர் கொண்ட கும்பல், 20 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசியுள்ளது. தொடர்ந்து, வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் பெண்களை தாக்கி கழுத்தை அறுத்து கொன்றுள்ளது. தகவலறிந்த மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
போலீசாரின், முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது .
அதன்படி, மறுகால்குறிச்சியில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த நம்பிராஜனும் வான்மதியும் இருவீட்டார் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டு நெல்லை டவுன் பகுதியில் வசித்து வந்தனர்.
திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில் நம்பிராஜனை வான்மதியின் உறவினர்கள் வெட்டிக் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றனர். அதற்குப் பழிவாங்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்களான சுரேஷ், ஆறுமுகம் ஆகிய இருவரை நம்பிராஜன் தரப்பு கொலை செய்தது. இந்தப் பழிவாங்கல் படலத்தின் தொடர்ச்சியாக இன்று நம்பிராஜன் வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.
இதில் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், சகோதரி சாந்தி, சாந்தியின் 3 வயது பெண் குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆனாலும், ஆத்திரம் தீராத கும்பல், சண்முகத்தாய், சாந்தி இருவரது கழுத்தையும் கொடூரமாக அறுத்துக் கொன்றது. இதில் சாந்தியின் தலை துண்டானது. காயமடைந்த 3 வயது பெண் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ண தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்து வான்மதியின் சகோதரன் உட்பட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.