உலகில் ஏகப்பட்ட பறவையினங்கள் இருக்கின்றன. ஒரு சில பறவை மட்டுமே நமக்கு தெரியும்.
நமக்கு தெரியாத எத்தனையோ வித்தியாசமான அதிசயமான பறவைகளும் இந்த பூமியில் இருக்கிறது. அப்படிப்பட்ட பறவைகளுள் ஒன்றுதான் அல்பாட்ராஸ். தமிழில் இதை அண்டரண்டப் பறவை என்று அழைக்கலாம்.
உலகிலேயே மிகப்பெரிய இறக்கை கொண்ட பறவை இதுதான். சுமார் 8 முதல் 11 அடிவரை இதனுடைய இறக்கையின் நீளம் இருக்கும். இதனுடைய கழுத்து வெள்ளை நிறத்தில் இருக்கும். பெரும்பாலும் மீன்களையே இந்த பறவை உண்ணுகிறது.
தனது கூடுகளை கடற்கரைக்கு அருகிலேயே அமைத்துக் கொள்ளும். காற்றின் வேகத்தை துல்லியமாக கணித்து தனது நீளமான இறக்கை மூலம் மிக அதிக தூரம் வரை இந்த பறவை பறக்கும் திறன் கொண்டது. அதாவது 9000 கிலோமீட்டர் தூரம் வரை பறக்க முடியும்.
தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டே தூங்க கூடியது. மனிதரை பார்த்து இந்த பறவை பயப்படுவதெல்லாம் கிடையாது. நீள இறக்கை இருப்பதால் இதை பார்க்க மனிதர்களுக்குத்தான் பயமாக இருக்கும்.
மிகப்பழமையான பறவையினங்களில் இது முக்கியமானதாகும். வட பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த பறவை காணப்படுகிறது. பெரும்பாலான நேரத்தை கடல் நீரிலேயே இது கழிக்கிறது.