சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகளும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
சமீபத்தில் ரஷ்யா மனிதர்கள் மீது நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதாக தெரிவித்திருந்தது. இப்போது தாய்லாந்தும் மிருகங்கள் மீது நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனை வெற்றியடைந்துள்ளதால், மனிதர்கள் மீது சோதனை நடத்த உள்ளது.

நவம்பர் மாதம் மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்க உள்ளது. முதல்கட்டமாக 10,000 தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணியிலும் தாய்லாந்து ஈடுபட்டுள்ளது. இது குறித்து பாங்காக்கின் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழக தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தின் இயக்குனர் கியாட் பேசும்போது, “ மனித உடலில் பரிசோதிப்பதற்கான முதல்கட்ட மருந்து தயாரிப்பு அக்டோபர் மாதம் முடிவடையும். இரண்டாம் கட்ட தயாரிப்பு நவம்பரில் நிறைவடையும். இப்போது உருவாக்கப்படும் 10 ஆயிரம் மருந்துகளில் 5 ஆயிரம் மருந்துகள் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும்.

திட்டமிட்டபடி அனைத்தும் நடத்தால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மருந்து பயன்பாட்டுக்கு வரும். மிருகங்களிடம் நடைபெற்ற சோதனை வெற்றி பெற்றுள்ளது.” என்று கூறியுள்ளார்.
தாய்லாந்தில் இதுவரை 3,217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 58 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சமயத்திலேயே எய்ட்ஸ் மருந்தை வைத்து இந்த வைரசுக்கு சிகிச்சை அளித்து அது பலனளித்ததாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்திருந்தது.