ஆப்கானிஸ்தானில் சந்தேகத்தால் மனைவியின் மூக்கை, கணவன் அறுத்து எறிந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.
காபூலில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சார்கா. படிப்பறிவு இல்லாத இவருக்கு 18 வயத்திலேயே உறவினர்களால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, அவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 28 வயதுடைய சார்காவை, எந்த பணிக்கும் செல்லாத முரட்டுத் தனமான அவரது கணவன் தினமும் அடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 வாரங்களுக்கு முன்பாக மனைவியின் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தால் சார்காவின் கணவர் கத்தியை வைத்து அவரது மூக்கை அறுத்து எரிந்துள்ளார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த சார்காவை சிகிச்சைகாக காபூல் அழைத்து வர, உள்ளூர் அரசியல் தலைவர்கள் மிகவும் போராடி உள்ளனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 21ம் தேதி 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து உள்ளது. தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மூக்கின் இறுதி வடிவத்தை மேம்படுத்த மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சார்கா தெரிவித்து இருப்பதாவது,
என் கணவரிடம் சொல்லாமல், என் தாய் வீட்டிற்கு சென்றது அவருக்கு அவமானமாகிவிட்டது. என்னை ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்று, ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என கேட்டு அடித்தார். எனது நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக கூறியதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனாலும், தொடர்ந்து என்னை தாக்கியவர், சட்டை பையில் இருந்த ஒரு கத்தியை எடுத்து என் மூக்கை அறுத்தார். இரத்தம் வழிந்த நிலையில், என்னை அவர் என்னை அங்கேயே தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்” என நடந்தவற்றை சார்கா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மிகவும் அதிகளவில் காணப்படுகிறது. அந்நாட்டில் 87 சதவீதம் பெண்கள் உடல் ரீதியான துன்பங்களுக்கோ அல்லது பாலியல் வன்முறைக்கோ ஆளாக்கப்படுகின்றனர், மனதளவிலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என ஐ.நா., மக்கள் தொகை அமைப்பு நடத்திய தேசிய கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கணவனோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறு ஆண்கள் கூட பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடுமைகளும் நடக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.