நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கான இந்தியாவின் உதவி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பேரிடர் ஏற்பட்ட முதல் நாளிலேயே நிவாரணப் பொருட்களை அனுப்பத் தொடங்கிய இந்தியா, தற்போது உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளுடன் நிற்காமல், மீட்பு நிபுணர்கள், சுரங்க மீட்பு உபகரணங்கள், தடயவியல் குழுக்கள் மற்றும் சேதமடைந்த போக்குவரத்து இணைப்புகளை மீட்டெடுப்பதற்கான பால உபகரணங்கள் வரை வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (செப்.4) மேலும் இரண்டு இந்திய விமானப்படையின் C-130J விமானங்கள் 21.5 டன் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் காத்மாண்டுவை சென்றடைந்துள்ளன. இந்தப் பொருட்கள் நேபாள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் மகாபீர் புன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
10 டன்னில் தொடங்கிய உதவி
ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்துக்குப் பிறகு, இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவிகளை அனுப்பத் தொடங்கியது. பேரிடர் ஏற்பட்ட அன்றே முதல் கட்டமாக இந்திய விமானப்படையின் C-130J விமானம் மூலம் சுமார் 10 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
அடுத்த நாளான ஆகஸ்ட் 27-ல் C-17 Globemaster விமானம் மூலம் மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்தை சென்றடைந்தன. இதன் மூலம் முதல் இரண்டு கட்டங்களிலேயே இந்தியா வழங்கிய உதவி 47.5 டன்னாக உயர்ந்தது.
அதன்பிறகும் உதவி நிற்கவில்லை. அடுத்தடுத்த விமானங்கள் மூலம் கூடுதல் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்களின் அளவு 68.5 டன்னாக உயர்ந்தது.
மருந்துகளுடன் சென்ற ஐந்தாவது விமானம்
செப்டம்பர் 2-ஆம் தேதி ஐந்தாவது இந்திய விமானப்படை விமானம் காத்மாண்டுவை சென்றடைந்தது. அதில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள், வலி நிவாரணிகள், அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் உள்ளிட்ட சுமார் 5.5 டன் மருத்துவப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அந்த விமானத்தில் 11 பேர் கொண்ட சிறப்பு மீட்புக் குழுவும் நேபாளம் சென்றது. அவர்களுடன் 6 டன்னுக்கும் அதிகமான சிறப்பு மீட்பு உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டன. இந்தக் கட்ட உதவியுடன் இந்தியா நேபாளத்திற்கு வழங்கிய நிவாரண உதவியின் அளவு சுமார் 74 டன்னாக உயர்ந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மேலும் இரண்டு C-130J விமானங்களில் 21.5 டன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் காத்மாண்டுவை சென்றடைந்துள்ளன. இதனால் நேபாளத்துக்கான இந்தியாவின் நிவாரண உதவி தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
நிவாரணத்தைக் கடந்து மீட்புப் பணியிலும் இந்தியா
இந்தியாவின் உதவி பொருட்களை அனுப்புவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி பகுதியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து சுரங்க மீட்பு நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சிலிமே பகுதியில் நேபாள ராணுவத்துடன் இணைந்து இந்தியக் குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சுரங்கத்துக்குள் சேறும் தடைகளும் நிறைந்திருந்தபோதிலும், மீட்புக் குழுவினர் சுமார் 100 மீட்டர் வரை முன்னேறியதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கனரக மீட்பு இயந்திரங்களை அந்தப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கான மாற்று சாலை அணுகுமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
DNA பரிசோதனைக்கும் இந்திய நிபுணர்கள்
பேரிடரில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான பணிகளிலும் இந்தியா உதவி வழங்கி வருகிறது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட தடயவியல் நிபுணர்கள் நேபாள நிபுணர்களுடன் இணைந்து காத்மாண்டுவில் உள்ள இரண்டு ஆய்வகங்களில் DNA மாதிரிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போர்வைகள், sleeping bags, தார்ப்பாய்கள், பிளாஸ்டிக் ஷீட்கள், சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அவசரகால நிவாரணப் பொருட்களும் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
பாலங்களை மீண்டும் இணைக்கவும் உதவி
பெருவெள்ளத்தால் நேபாளத்தின் பல பகுதிகளில் சாலை மற்றும் பால இணைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து தொடர்புகளை மீட்டெடுக்க Bailey Bridge எனப்படும் தற்காலிக இரும்புப் பாலங்கள் முக்கியத் தேவையாக மாறியுள்ளன.
இந்த நிலையில், 230 அடி நீளமுள்ள ஒற்றைப் பாதை modular steel bridge அமைப்பதற்கான உபகரணங்களை ஏற்றிச் சென்ற 16 லாரிகள் நேபாளத்தை சென்றடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இணைப்புகளை மீட்டெடுப்பதற்காக 42 Bailey Bridges அமைக்க இந்தியாவின் உதவியை நேபாளம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அளித்த உறுதி
பேரிடர் ஏற்பட்ட ஆகஸ்ட் 26-ஆம் தேதியே பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசியில் பேசினார். உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்தக் கடினமான நேரத்தில் நேபாள மக்களுடன் இந்திய மக்கள் துணை நிற்பதாகக் கூறினார்.
மேலும், நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்தியக் குழுக்கள் நேபாள அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் உறுதியளித்தார்.
பேரிடர் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே தொடங்கிய இந்தியாவின் உதவி, தற்போது நிவாரணப் பொருட்கள் வழங்குவது என்ற நிலையைக் கடந்து மீட்பு, மருத்துவம், தடயவியல் ஆய்வு, சுரங்க மீட்பு மற்றும் சேதமடைந்த போக்குவரத்து கட்டமைப்புகளை மீட்டெடுப்பது வரை விரிவடைந்துள்ளது. நேபாளத்தின் அவசரகாலத் தேவைகள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவின் உதவியும் பல்வேறு தளங்களில் தொடர்கிறது.






