11 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட ஸ்ரீநகர் – ஷார்ஜா விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மறுப்பு; இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் தன் மனநிலையை பாகிஸ்தான் அரசு மாற்றாமல் இருப்பது துரதிஷ்டவசமானது என உமர் அப்துல்லா கருத்து.
டெல்லி, கடந்த அக்டோபர் 23ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்ரீநகரில் உள்ள ஷேக் உல்-ஆலம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர்-ஷார்ஜா இடையேயான விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆனால் இப்போது பாகிஸ்தான் அரசு ஸ்ரீநகர்-ஷார்ஜா விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மறுத்துள்ளது. இந்தநிலை இன்று நேற்று தொடங்கியது அல்ல! 11 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு முதல் சர்வதேச விமானம் பிப்ரவரி 14, 2009 அன்று “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்” மூலம் தொடங்கப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் அரசு அதன் வான்வெளியை பயன்படுத்த மறுத்தது. பின்னர் பாகிஸ்தான் வான்வெளி அல்லாமல் சுற்றுப்பாதையில் விமானம் இயக்கப்பட்ட போதிலும் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளத்தாக்கு நிறைந்த காஷ்மீரையும் எமிரேட்டை இணைக்கக் கூடிய வகையில் கடந்த அக்டோபர் மாதம் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு “வான்வெளி பயன்படுத்த தடை” என்ற நிலையை கையில் எடுத்துள்ளதால் ஸ்ரீநகர் சார்ஜா விமானமானது உதய்பூர்,அகமதாபாத் மற்றும் ஓமன் வழியாக ஷார்ஜா செல்ல வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பயண நேரம் அதிகரிக்கும் எனவும் விமான பயணத்திற்கான டிக்கெட் விலையும் கணிசமாக உயரக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு எப்படி பட்ட மனநிலையில் இருந்ததோ 2021ஆம் ஆண்டிலும் அதே மனநிலையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என பதிவிட்டுள்ளார்.