ஆஸ்திரேலியாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில், பியரி என்ற பென்குயின் பறவை, ஐ-பாடில் “பிங்கு” கார்டூன் பார்க்கும் காட்சி அனைவரையும் பிரமிப்படையச் செய்திருக்கிறது.
இங்கு குழந்தைகள் விரும்பி பார்க்கும் “பிங்கு” என்னும் கார்ட்டூனை பார்ப்பது ஒரு குழந்தை இல்லை, ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் வனவிலங்கு பூங்காவில் உள்ள, பியரி என்னும் பென்குயின் பறவை தான் அது.
இந்தப் பியரி, ஆஸ்திரேலியாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது என்று அதன் பராமரிப்பாளர் தெரிவிக்கிறார். இந்தப் பறவை மிகவும் அரிய வகையான நார்த்தர்ன் ராக்ஹூப்பர்ஸ் பென்குயின் இனத்தை சேர்ந்தவை ஆகும்.
பிங்கு வீடியோ தொடங்கினவுடனேயே, மகிழ்ச்சியில் பியரி சுற்றி சுற்றி வருவதையும், வேடிக்கையாக திரிவதையும் காண முடியும் என அதன் பராமரிப்பாளர் தெரிவிக்கிறார்.
தன்னைப் போலவே இருக்கும் பிங்குவை, தன்னை தனிமையிலிருந்து விடுவித்துக்கொள்ளவதற்காக, இந்த கார்ட்டூனை ஐ-பேடில் பார்த்து மகிழ்கிறதாம், இந்த பியரி. மேலும், இந்த கார்ட்டூனைப் பார்க்க ஆரம்பித்ததுமே, பியரி மகிழ்ச்சியில் பேசவும் ஆரம்பித்து விடுகிறதாம்.
பியரியின் சிறகுகளில் சில பிரச்சனைகள் இருப்பதால், அதனால் நீந்த முடியாதாம். எனவே அதன் உடல் நிலையை சீராக்க, பெர்த் மிருகக்காட்சிசாலையின் கால்நடை குழுவினர், முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பியரி முழு உடல் ஆரோக்கியத்தை பெற்றதும், அதை மீண்டும் அதன் இனத்தோடு கொண்டு சேர்க்க வேண்டும் என அதன் பராமரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.
எனவே மற்ற பென்குயின்களுடன் சேர்ந்ததும், அவர்களுடன் சேர்ந்து வாழ வசதியாக இருக்கும் வண்ணமாக, இப்பொழுதே அதற்கு பயிற்சி அளிக்கும் விதமாக, பியரிக்கு பிங்கு கார்ட்டூனை காட்டி வருகின்றனர் என்று அதன் பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பியரி கார்ட்டூன் பார்க்கும் புகைப்படத்தை, மிருகக்காட்சி சாலையைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார். இது மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பலரும் இந்த புகைப்படத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் உள்ளனர். குழந்தைகள் மட்டும் அல்ல, பென்குயின் கூட கார்ட்டூன் பார்க்கும் என்பதை, இந்தப் புகைப்படம் நிரூபித்துள்ளது. சீக்கிரமாக பியரி இயல்பு நிலைக்கு திரும்பி, அதன் இனத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையாகவும், பிரார்த்தனையாகவும் இருக்கிறது.