
நேட்டோவில் இணையும் முடிவெடுத்தற்காக உக்ரைன் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக பெரியதாக அமைந்து விட்டது. உக்ரைனின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அந்நாடு மீது போர் தொடுத்தது ரஷ்யா. சர்வதேச மற்றும் மேற்குலக நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 9 மாதங்களை கடந்து போரை நடத்தி வருகிறது ரஷ்யா.
ஐநா தலையிட்டும் போர் முடிவிற்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பான ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு கூட புதின் முன்வரவில்லை. சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தாலும் அசரவில்லை புதின். பதிலுக்கு உரம், இயற்கை எரிவாயு விநியோகத்தை கட்டுப்படுத்த பதிலடி கொடுத்தார்.
அதோடு, உலகின் முக்கியமான உணவு தானியம் மற்றும் உரம் தயாரிப்பாளர்களான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து தானியங்கள் மற்றும் உரம் ஏற்றுமதி தடைபட்டதால் மேற்குலக நாடுகள் மற்றும் பெரும்பாலான ஆப்பரிக்க நாடுகள் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்தித்துள்ளன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் உக்ரைனை ஆக்கிரமித்திருந்த கேர்சான் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் படைவீரர்களை திரும்பப் பெற்றார் புதின். மேலும் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருக்கும் அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சர்வதேச அணு பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்ததையடுத்து அணு ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என புதின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போர் முடிவடைய இன்னும் சிலகாலம் ஆகலாம் என தெரிவித்துள்ளார். அதோடு அணு ஆயுதப்பிரயோகம் குறித்தும் புதின் ரஷ்யாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இரண்டாம் முறை உக்ரைனில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார். அதேவேளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் மேலும் சில பகுதிகளை விடுவிக்க தயாராக உள்ளதாகவும் புதின் அறிவித்துள்ளார்.
துருக்கியின் வேண்டுகோளை ஏற்று கருங்கடல் துறைமுகங்கள் வழியாக உணவு தானிய மற்றும் உர ஏற்றுமதிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதினின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேரடியாக சீனாவும் மறைமுகமாக வடகொரியாவும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில் கிட்டதட்ட 93,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.