2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி தனது வரலாற்றில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கு இணங்க, ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் குறைவான வாக்கு வீதத்தையே பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி மாவட்டங்களாகக் கருதப்படும் சில மாவட்டங்களிலேயே, இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
மேலும், இந்தக் கட்சியை அடுத்து இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது காணப்படுகிறது. மூன்றாவது இடத்திற்கு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, முக்கிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அரசியல் விமர்சகர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் சில அதிருப்தி செயற்பாடுகளுமே இதற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலைவரப்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2,554,245 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி 887,868 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 179,554 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 147,991 வாக்குளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 81,092 வாக்குகளைப் பெற்றுள்ளது