ஒபாமா, பில்கேட்ஸ் என உலகின் மிகப்பிரபலமான 45 பேரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவன தலைவர் ஜேப் போனர்ஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உள்பட உலகின் மிகப்பிரபலமான 45 பேரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் கடந்த மாதம் 15 ஆம் தேதி மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.
ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் பக்கங்களில் இருந்து, ‘ கொரோனா வைரஸ் காரணமாக நான் என் சமூகத்திற்கு திருப்பி கொடுக்கிறேன். எனக்கு நீங்கள் அனுப்பும் அனைத்து பிட்காயின் கிரிப்போடோ கரண்சிகளும் இரட்டிப்பாக உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் 1,000 டாலர்களை எனக்கு அனுப்பினார் அது 2,000 டாலர்களாக இரு மடங்காக உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும்’ என பதிவிடப்பட்டிருந்தது.
பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிட்காயின் தொடர்பான செய்திகள் வெளியானதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தான் பிரபலங்களின் டுவிட்டர் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பிரபலங்களின் டுவிட்டர் பக்கங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த ஹேக்கிங் ரஷியா அல்லது சீனாவால் நடைபெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. மேலும்,இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காய்ன் தொடர்பான தகவல்களை வெளியிட்டது. 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்தது.
புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிராகாம் கிளார் என்ற பெயருடைய 17 வயது சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த டுவிட்டர் ஹேக்கிங்கில் கிலார் குறைந்தது 1 லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹேக்கிங் செய்யகாரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.