கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் ராணியின் பேத்திக்கு ரகசியமாக, எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான 31 வயது இளவரசி பீட்ரைசுக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. பீட்ரைஸ் கோடீஸ்வரரும், 37 வயதான பிரபல தொழிலதிபருமான எடோர்டோ மாபெல்லி மோஷியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மே மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் இளவரசி பீட்ரைசுக்கும் எடோர்டோ மாபெல்லி மோஷிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமண விழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிலீப் மற்றும் மகன் ஆண்ட்ரூவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த திருமண விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக பிரிட்டன் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.