இந்த கொரோனா நோய் பரவல் சூழ்நிலையிலும் உலகமே மிகவும் உற்று நோக்கிய விஷயம் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல்தான் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் இறுதியாக நவம்பர் 7 ஆம் தேதி 290 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தேடுக்கப்பட்டார்.
ஆனால் இன்னும் சிக்கல் நீடிக்கிறது அதிபர் தேர்தலில் தோற்றிருந்தாலும் அதிகார மாற்றத்துக்கு டிரம்ப் ஒத்துழைக்காத நிலை அமெரிக்காவில் இன்னும் நீடிக்கிறது. இதனால் அமெரிக்காவில் இன்னும் பரபரப்பு ஓய்ந்த பாடில்லை.
இதனிடையே சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமெரிக்கா அதிபரின் மனைவியான மிச்சல் ஒபாமா. அதில் அவர் கூறியிருப்பதாவது: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்த இடத்தை நினைத்து பார்க்கிறேன்.இந்த ஆண்டு நாம் கண்டதை விட மிக நெருக்கமான வித்தியாசத்தில் நமது கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளின்டன் தோல்வியடைந்திருந்தார். நான் வேதனையடைந்தேன். மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
ஆனால் டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயகத்தின் குரலுக்கு மதிப்பளிப்பது தான் அதிபர் பதவியின் முக்கிய பொறுப்பு. அதனால் எங்களுக்கு ஜார்ஜ் மற்றும் லாரா புஷ் செய்ததை டிரம்பிற்கு செய்யும் படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினோம். தடையற்ற அதிகார மாற்றத்தை செயல்படுத்தினோம். அதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு. டிரம்ப் அப்போது எனது கணவர் குறித்து இனவெறி பொய்களை பரப்பியிருந்தார். என் குடும்பம் ஆபத்தில் இருந்தது. அவரை மன்னிக்க முடியவில்லை.
நம் நாட்டின் பொருட்டு, என் கோபத்தை ஒதுக்கி வைத்து அவரை வரவேற்றேன். நம் ஜனநாயகம் யாருடைய பிடிவாதத்தையும் விட மிகப்பெரியது. முடிவுகளை நாம் விரும்பா விட்டாலும் அவற்றை மதிக்க வேண்டும் என கூறிய மிச்சல் அதிபர் பதவி எந்தவொரு தனிநபருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல. சதி நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்து விளையாடுவது நாட்டின் நலத்துக்கும், பாதுகாப்பும் நல்லதல்ல. இவ்வாறு காட்டமாக கூறியுள்ளார். அவரின் பதிவை ஒரு மணி நேரத்தில் சுமார் 27 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.