அமெரிக்காவில் வசித்து வந்த, இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரர் இக்பால் சிங், தனது தாய் மற்றும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரர், இக்பால் சிங். இவர் 1983-ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் வெண்கலம் வென்று, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். அதன்பின்பு, அமெரிக்கா சென்று, அங்கு பென்சில்வேனியாவில் உள்ள நியூடவுன் டவுன்ஷிப்பில் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். அங்கு டாக்சி டிரைவராக வேலைப் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, இவர் தனது தாய் மற்றும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
பின்னர், தனது மகனுக்கும், மகளுக்கும் ஃபோன் செய்து, ‘நான் உன் அம்மாவையும் பாட்டியையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்கள் போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார், இக்பால் சிங் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு அவரது மனைவியும், தாயும் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்துக் கிடந்துள்ளனர். அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த இக்பால் சிங்கையும் மீட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டைக் கொலை செய்த இக்பால் சிங்கை கைது செய்து, போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்பால் சிங் எதற்காக கொலை செய்தார் என்ற காரணம் இன்னும் தெரியவரவில்லை.