சென்னைசூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என, சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சென்னை அணியில் இருந்து, ரெய்னா மட்டும் நாடு திரும்பியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக அணி நிர்வாகம் மற்றும் தோனியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் நாடு திரும்பியதாகவும், இனி சிஎஸ்கே அணிக்காக அவர் விக்கையாடுவது சந்தேகமே என பல செய்திகள் வெளியாக தொடங்கின.
இந்நிலையில், கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ரெய்னா கூறியதாவது: இந்தியாவுக்கு திரும்பியது என்பது எனது சொந்த முடிவு. எனது குடும்பத்திற்காக வந்துள்ளேன். சென்னை அணியும் எனது குடும்பம்தான். தோனி எனக்கு மிகவும் முக்கியமானவர். தொடரில் இருந்து விலகி வருவது என்பது கடினமான முடிவு. சென்னை அணியுடன் எந்த கருத்து வேறுபாடுமில்லை. நான் தனிமையில் இருந்தாலும், இன்னும் பயிற்சியில் தான் இருக்கிறேன் என்றார்.
மேலும், தொடரில் இருந்து விலகியது குறித்து அணி உரிமையாளருக்கு தெரியாது. அவரை எனது தந்தையை போல் கருதுகிறேன். அவர் எப்போதும் என்னுடன் இருந்துள்ளார். எனது மனதிற்கு நெருக்கமானவர். தனது இளைய மகன் போல் என்னை நடத்தினார். அவர் என்னை பற்றி கூறிய வார்த்தைகளை, மகனை தந்தை திட்டியது போல் உணர்கிறேன். சென்னை அணிக்காக அடுத்த 4 – 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரெய்னா பற்றி தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக, சிஎஸ்கே அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.