இந்திய ரயில்வே வாரியத்தின், முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக, தற்போதைய தலைவராக இருந்த, வி.கே.யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கர்மயோகி திட்டம் உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கு, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதன்படி, இந்தக் கூட்டத்தில், ரயில்வே வாரியத்திற்கு சி.இ.ஓ. பதவி நியமனத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ரயில்வேயின் தற்போதைய தலைவராக உள்ள வி.கே. யாதவ், ரயில்வே வாரியத்தின், முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, தற்போதுள்ள ரயில்வே நிர்வாகக் குழுவில், உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தலைமை நிர்வாக அதிகாரியாக வி.கே.யாதவ் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பி.சி.சர்மா, பிரதீப் குமார், பி.எஸ்.மிஸ்ரா, மஞ்சுளா ரங்கராஜன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், ரயில்வேயின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி என்றப் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார், வி.கே.யாதவ்.




