Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

தாய்மையில் கனியும் இறைமை

September 12, 2020
– விஜயலக்ஷ்மி எஸ். கே

“மாதங்கள் பத்து கருவில் சுமக்காது போனாலும், மங்காத தாய்மைக்குணம் நிரம்பிய அனைத்து மங்கையரும், சிறந்த அன்னையரே….!”

“ஆஹாஹா… எத்தனை உண்மை… “அன்னையர் தினக் கவிதையைப் படித்ததும், காவேரி அம்மாவின் உருவம்தான் மனசுக்குள் தோன்றியது.

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால்.. ஒரு நாள் காலை.. சாவகாசமாகத் தினசரி பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த என் கவனத்தைக், கீழ்ப் போர்ஷனில் குடியிருக்கும் அகிலாவின்..

“அக்கா அக்கா சீக்கிரமா வாங்களேன்” என்ற பதட்டமான குரல்  கலைத்தது. அவசர அவசரமாக நான் கீழே வருவதற்கும்,  அகிலாவின் கூச்சலைக் கேட்டு, அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த பெண்கள் வரவும், சரியாக இருந்தது.

“என்ன அகிலா… எதுக்கு இப்படி சத்தம் போட்டே?” என்ற என் கேள்விக்குப் பதிலாக… எங்கள் வீட்டு வராண்டாவில் படுத்துக் கிடந்த ஒரு மூதாட்டியைக் காட்டினாள், அகிலா.

“அவரு வேலைக்குக் கிளம்பினதும், கேட்டைப் பூட்டலாம்-னு வெளில வந்தேங்க்கா. அப்ப இந்தப் பாட்டி தயங்கித்… தயங்கி வந்து, பசிக்குது.. சாப்பிட ஏதாவது வேணும்னு சைகை பண்ணினாங்கக்கா.. செரி.. தோசை சுட்டு எடுத்துட்டு வரலாம்னு உள்ளே போகத் திரும்பினேன்… அப்படியே மயங்கி சாஞ்சுட்டாங்க… நல்ல வேளை… கீழ விழுகறதுக்குள்ள புடிச்சுக்கிட்டேன்” என்றாள்… இன்னும் பதட்டம் நீங்காத குரலில்.

“சரி..சரி பேசிட்டே இருக்காதீங்க.. அகிலா ஓடிப் போய் சொம்புல தண்ணி எடுத்தா… மொதல்லா மயக்கத்த தெளிவிக்கோணும்” என்று முதலுதவி தரத் தயாரானார், பக்கத்து வீட்டுப் பார்வதி பாட்டி.

அகிலா கொண்டு வந்த தண்ணீரைப் பல முறை முகத்தில் தெளித்துப்… பலவந்தமாக வாயிலும் ஊற்றி… அந்தப் பாட்டியின் மயக்கத்தைத் தெளிவிப்பதற்குள்… எங்கள் அனைவருக்கும் மயக்கம் வந்து விட்டது.

அகிலா வேறு… “பாட்டி நீங்க யாரோ.. எவரோ… இப்பிடி எங்க வாசல்ல வந்து மயங்கி விழுந்திட்டீங்களே! உங்களுக்கு எதுனாச்சும்னா நாங்க இல்லே பதில் சொல்லணும்.? கண்ண முழிச்சுப் பாருங்க பாட்டி..! அக்கா.. பக்கத்துல யாராவது டாக்டர் இருந்தா கூப்பிடலாமா?” என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

எங்களுக்கும் உள்ளூற பயம்தான் என்றாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல் அகிலாவை சமாதானப்படுத்த… நல்ல வேளையாக பாட்டி கொஞ்சம்.. கொஞ்சமாக கண் விழித்தார். மெதுவாக அவரைத் தாங்கிப் பிடித்து, சுவற்றில் சாய்த்து உட்கார வைத்தோம். பாட்டிக்கு தாராளமாக அறுபது வயசுக்கு மேலிருக்கும். கை, காது, கழுத்து அத்தனையும் வெறுமையாக  இருந்தாலும், ஏழ்மை தெரியவில்லை. கட்டியிருந்த புடவையும் தரமானதாகத்தான் இருந்தது. ஒருவேளை வாழ்ந்து கெட்டவராக இருப்பார் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

“அக்கா நான் போய் தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்.. நீங்க இவங்களப் பாத்துக்கோங்க” என்றாள். தோசைய விட சாதமா இருந்தாதான் அவங்களுக்கு சாப்பிட இதமா இருக்கும் அகிலா… வீட்ல சாதம், சாம்பார் ரெண்டுமே சூடா இருக்கு.. நான் போய் எடுத்துட்டு வரேன்… நீ இவங்களப் பாத்துக்க” என்று சொல்லி விட்டு, நான் மேலே வந்து, சாதத்தை சாம்பாருடன் நன்றாகக் குழையப் பிசைந்துக் கொண்டு வந்ததுதான் தாமதம்… என்னிடமிருந்த தட்டைப் பிடுங்காத குறையாக வாங்கி… அவசர அவசரமாகச் சாப்பிட ஆரம்பித்து விட்டார் அந்தப் பாட்டி…. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. வயிறார சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ என்ற பாவனையில், நானும் அகிலாவும் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம். சாப்பிட்டு முடித்து, கை கழுவி, தண்ணீர் குடித்து முடித்ததும், பாட்டிக்கு கொஞ்சம் தெம்பு வந்து விட… எங்களைப் பார்த்து சிரித்தார்… கொஞ்சம் கூச்சத்துடன்.

“யார் நீங்க.? இங்க யாரைப் பார்க்க வந்தீங்க..? எங்கிருந்து வர்றீங்க….? என்று அகிலா சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுக்க…. கண்களைச் சுருக்கி கொஞ்ச நேரம் மையமாகப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி..” அர்த்தாகில்லா” என்றார்,  கன்னடத்தில்.. நல்ல வேளையாக அகிலா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவளாதலால், பாட்டி சொல்வதை எங்களுக்கு மொழி பெயர்த்தாள்.

“பாட்டி கர்நாடகாவின் உட்புற கிராமத்தைச் சேர்ந்தவராம்.. பெயர் காவேரியம்மா.. கிராமத்துப் பண்ணையார் வீட்டில், வீட்டு வேலைகளை இவரும், பண்ணையாருக்கு வண்டியோட்டியாக இவர் கணவரும், வேலை செய்துக் கொண்டிருந்தார்களாம்.!

பண்ணையாரும், அவர் மனைவியும் இவர்களை வேலைக்காரர்களாக நினைக்காமல், உடன் பிறந்தவர்களாகவே பாவித்தார்களாம். அவர்களின் குழந்தைகளும், இவர்களை சிக்கம்மா, சிக்கப்பா என்றே முறை வைத்து அழைப்பார்களாம். இவர்களுக்கும் திருமணமாகிப் பத்து ஆண்டுகளாகியும் பிள்ளைப்பேறு கிடைக்காமல் போக, பண்ணையாரின் குழந்தைகள் மேல் அதீத பாசம் வைத்திருக்கிறார்கள்.

ஒரு நாள் பண்ணையார் தன் மனைவி, மகன்களுடன் வண்டியில் கோயிலுக்குச் சென்று திரும்புகையில் நேரிட்ட ஒரு விபத்தில், பண்ணையாரின் மனைவியும், வண்டியோட்டி வந்த காவேரியம்மாவின் கணவரும் இறந்து விட்டார்களாம்.! கணவரை இழந்தபின்.. அனாதையாக.. அங்கே இருக்கப் பிடிக்காமல், எங்காவது போய்த் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் பண்ணையை விட்டுக் கிளம்பிய காவேரியை… கிளம்ப விடாமல் தடுத்து விட்டதாம் பண்ணையாரின் இரண்டு சிறு பிள்ளைகளின் அழுகை.

குழந்தைகளுக்காகத் தன் முடிவை மாற்றிக் கொண்டு, அங்கேயே தங்கி விட்டாராம். குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள ஆள் கிடைத்து விட்ட தைரியத்தில்… தன் சோகத்தை மறக்கக் குடிக்க ஆரம்பித்த பண்ணையார்… கிராமத்தின் பெருங்குடிமகனாக இருந்தவர், பெரும் குடிமகனாக மாறி விட்டார். குடலும், ஈரலும் வெந்து… உடல் நடுக்கத்துடன் இருக்கும் அவரைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக் கொண்டு வருமாம் காவேரிக்கு..

“குழந்தைகளுக்காகவாவது குடிக்காமல் இருக்கக்கூடாதா? அவர்களுக்கு யாரிருக்கிறார்கள்” என்று சண்டை போட்டால்… அவர்களுக்கு ஆயி, அப்பன் எல்லாம் நீதான்” என்று சொல்லி விடுவாராம். எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளையும், பண்ணையையும் விட்டு விட்டுப் போய் விடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு திடுதிப்பென்று ஒரு நாள் அவரும் தன் மூச்சை நிறுத்தி விட்டாராம்..

ஏழாவது படிக்கும் பெரியவனும்.. ஐந்தாவது படிக்கும் சின்னவனும் வந்து இவள் மடியில் விழுந்து.. “சிக்கம்மா நீயும் எங்களை விட்டுப் போயிடுவியா”  எனக் கதறி இருக்கிறார்கள்… உயிர் கசிந்து விட்டதாம் காவேரிக்கு. இதற்காக.. இந்தக் குழந்தைகளைக் காப்பதற்காகத்தான் கடவுள் தன்னை மலடாகப் படைத்து விட்டானோ என்று கூடத் தோன்றியதாம். அந்த நிமிடத்திலிருந்து அந்தக் குழந்தைகளின் நல்வாழ்வைத்தவிர, வேறு எதற்கும் ஆசைப்படக் கூடாது என்ற தீவிர முடிவுக்கு வந்து விட்டாராம்.

பண்ணையாரின் காரியமெல்லாம் முடிந்து, உறவினர்கள் காவேரியை வீட்டை விட்டுத் துரத்த செய்த பகீரதப் பிரத்தனங்களை எல்லாம், பண்ணையார் எழுதி வைத்த உயில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாம். எல்லாச் சொத்துக்களையும் சமமாகப் பிரித்து இரண்டு மகன்களுக்கும் எழுதி வைத்த பண்ணையார்… அவர்களுக்கு கார்டியனாக காவேரியை நியமித்ததுடன்… காவேரியின் இறுதிக்காலத்திற்குப் பின் தான், சொத்துக்கள் பிள்ளைகளுக்குச் சேரும். அதுவரை சொத்துக்களை விற்கவோ.. யாருக்கும் கொடுக்கவோ.. பிள்ளைகளுக்கு உரிமையில்லை…

காவேரியின் சம்மதம் இல்லாமல், எந்த ஒரு சொத்தையும் விற்க பிள்ளைகளுக்கு உரிமை இல்லை என்றும் எழுதி வைத்து, உதவிக்கு நம்பிக்கைக்குரிய பசவண்ணா என்ற காரியஸ்தரையும் நியமித்து விட்டுத்தான், பண்ணையார் பரமபதமடைந்தார். இதைக் கேட்டதும்,  காசுக்கு ஆசைப்பட்டு வந்து சேர்ந்த உறவுக் கூட்டம், பண்ணையாரையும், காவேரியையும் வாய்க்கு வந்தபடி விரசமாகப் பேசியபடி ஏசியபடி போய்ச் சேர்ந்தனர்.

அதற்குப் பின் சொத்துக்களுக்குத் தான் கார்டியனாக இருந்தாலும், அதற்காக எந்த ஆதாயத்தையும் தேட முற்படவில்லை, காவேரி. பண்ணையாரின் மாளிகைத் தோட்டத்திலிருந்த தன்னுடைய ஒற்றைவில்லை வீடுதான், அவளுடைய ஜாகை. எஜமானர்கள் இருந்த வரை எப்படி வேலைக்காரியாக இருந்தாளோ, அப்படியே இருந்தாள்… எந்த உரிமையையும்.. வசதியையும்… அனுபவிக்க, அவள் மனம் இடம் தரவில்லை.

பிள்ளைகள் வளரும் வரை, அவர்களுக்குத் துணையாக பங்களாவுக்குள்.. அதுவும் தரையில் கோரைப்பாய் விரித்துப் படுத்தவள். அவர்கள் வளர்ந்ததும் பழையபடி தன்னுடைய வீட்டுக்கு படுக்கப் போய்விடுவாள்.. கூடப் பிறக்காத சகோதரனாக பசவண்ணா இருக்க, குறையொன்றுமில்லாமல் எல்லாம் நன்றாகவே நடந்தது. தந்தையின் மறைவுக்குப் பிறகு தங்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்த காவேரியை, “அம்மா”-என வாய் நிறைய அழைக்க ஆரம்பித்து விட்டார்களாம். அவர்கள் அப்படி அழைக்கும் போதெல்லாம், சொர்க்கத்தில் இருப்பதாக உணர்வாளாம்.

பிள்ளைகள் ஸ்கூல் படிப்பு முடியும் வரை, காரியஸ்தர் உதவியுடன் வீடு, பண்ணை நிர்வாகங்களைத் திறம்படக் கவனித்துக் கொண்டாள், காவேரி.. அதுவரை “அம்மா..அம்மா” என்று அவளையே சுற்றி.. சுற்றி வந்தவர்கள்… கல்லூரியில் சேர்ந்ததும், கொஞ்சம்.. கொஞ்சமாக குணத்திலும், நடவடிக்கைகளிலும் மாறிப் போனார்கள்.

தவறான சகவாசம், குடிப்பழக்கம், தகுதியில்லாத பெண்களுடன் காதல், கல்யாணம் என்று அடாவடித்தனங்களில் இறங்கி ஆட்டம் போட்டார்கள். வீட்டுக்கு வந்த மருமகள்களும், பணத்துக்காக இவர்களைக் காதலித்து மணந்தவர்கள். பணத்துக்காக எதையும் செய்யும் கீழ்த்தரமானவர்கள். பணத்துக்காக, சொத்துக்களை விற்க காவேரியிடம் கையெழுத்து வாங்க அவர்கள் செய்யாத அராஜகங்களே இல்லையாம்.

புத்திமதி சொல்ல வந்த பசவண்ணாவையும், காவேரியையும் இணைத்துத் தவறாகப் பேசியதுமல்லாமல், கிராமத்திலும் அவர்களைப் பற்றி ஆபாசமாகப் பொய்யுரைப் பரப்ப… பிள்ளைகளும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட… மனம் தாளாத பசவண்ணா வேலையை விட்டு நின்றுவிட்டார். அப்போதும் அவர் மேல் திருட்டுப் பட்டம் சுமத்தி, போலீசில் புகார் கொடுக்க, அவமானம் தாங்காமல் லாக் அப்பிலேயே தூக்கு மாட்டி இறந்து போனார்,  பசவண்ணா.

இதை எல்லாம் பார்த்து, சகலமும் வெறுத்துப் போனது காவேரிக்கு. இனி தானும் இங்கிருந்தால், என்னென்ன பழிச்சொல்லுக்கெல்லாம் ஆளாகப் போகிறோமோ என்ற பயத்தில், தினம் தினம் செத்துப் பிழைத்திருக்கிறாள். வீட்டை விட்டு வெளியேற முடியாமல், பண்ணையாருக்கு செய்து கொடுத்த சத்தியம் தடுக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறாள்.

எத்தனை தொல்லைகள் கொடுத்தாலும், வீட்டை விட்டுப் போகாமல் அழிச்சாட்டியம் பண்ணுகிறாளே என்ற எரிச்சலில், இரண்டு மருமகள்களும் சேர்ந்து…. எங்கேயாவது பாஷை தெரியாத ஊரில் கொண்டுப் போய் விட்டு விட்டு வந்துவிடும்படி, தங்கள் கணவர்களுக்குத் தூபம் போட… சகோதரர்களுக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்ற… “நீ ரொம்ப நாளாகப் போகணும்னு ஆசைப்பட்ட காசிக்கு, ஏரோப்ளேனில் அழைச்சிட்டுப் போறோம் என்று சொல்லி… ஃப்ளைட் டிக்கட்டுக்குத் தேவைப்படுகிறதென்று ஏமாற்றி, தேவையான பேப்பர்களில் கைநாட்டு வாங்கிக் கொண்டு விட்டார்கள்”.

“நான் காசிக்குப் போய் வருகிறேன்.. என்று மருமகள்களிடம் சொல்லி விட்டுப் புறப்பட்டவளை.. இந்த மாதிரி தங்க நகைகளைப் போட்டுகிட்டுப் போனா, வடநாட்டுல திருடங்க பிடுங்கிட்டுப் போயிடுவாங்களாம்… எங்க உறவுக்காரங்க கம்மலைக் கழட்ட முடியலேன்னு… காதையே அறுத்துட்டாங்களாம்”னு, பெரிய மருமகள் சொல்ல.. அமைதியாக எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டாள்!…

காவேரியை அழைத்துக் கொண்டு.. எங்கேயாவது வட நாட்டில் விட்டுவிட்டு வந்து விடலாம் என்று ரயிலில் கிளம்பியவர்கள்,  அவ்வளவு தூரம் இந்தக் கிழவியோடு யார் பயணம் செய்வது. எப்படியும் கன்னடத்தைத் தவிர கிழவிக்கு வேற பாஷை தெரியாது என்ற தைரியத்தில், பாதி வழியிலேயே காவேரி அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து, கம்பி நீட்டி விட்டிருக்கிறார்கள்..

ராத்திரி நேரம் பல நாட்களாக சரியான சாப்பாடு இல்லாமல், அழுதழுது….. தலை ஒரு கோலம், உடம்பு ஒரு கோலமாக இருந்தவளை.. டிக்கெட்டும் இல்லாததால், சந்தேகப்பட்டு… டிக்கெட் பரிசோதகர், இந்த ஊரில் இறக்கி விட்டுவிட்டார். கால் போன போக்கில் நடந்து, எங்கள் வீட்டருகில் வந்ததும் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறாள். இத்தனை கதையையும், அகிலா காவேரியம்மாவிடம் கேட்டு மொழிபெயர்ப்பதற்குள் நேரம் பனிரெண்டைக் கடந்துவிட்டது.

அதுவரை வராண்டாவிலேயே உட்கார வைத்திருந்த காவேரியம்மாவை, அகிலா வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து,  ஃபேனைப் போட்டாள்… மதிய சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டு.. மோரை மட்டும் வாங்கிக் குடித்து விட்டு, அயர்ச்சியில் அப்படியே உறங்கிப் போய் விட்டவரைப் பார்த்து, எனக்கும் அகிலாவுக்கும் கண்களில் கண்ணீர் தளும்பியது.

காவேரியம்மாவின் வளர்ப்பு பிள்ளைகளை நினைத்து ஆத்திரமாக வந்தது.. நன்றி மறந்தவர்களை, அந்த தெய்வம்தான் பார்த்து தண்டிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மாலை என் கணவரும், அகிலாவின் கணவரும் வந்ததும்… எல்லோரும் உட்கார்ந்து ஆலோசனை செய்தோம். அகிலாவின் கணவர், காவேரி அம்மாவை அழைத்துக் கொண்டு போய்… அந்த நன்றிக் கெட்ட மகன்களை நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேட்டுவிட்டு வரலாம் என ஆவேசப்பட, என்னவரோ.. போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயிண்ட் தரலாம் என யோசனை சொல்ல…

காவேரி அம்மா கண்களில்…. கண்ணீர் பெருக….

“வேண்டாம்… துரைமாரே… எம்புள்ளைங்க மேல எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேணாம்… அவங்க என்னை தாயா மதிக்கலேன்னா பரவாயில்லை… நான் அவங்களை கருவுலதான் சுமக்கலையே தவிர…. தோள்லயும்… மடியிலயும் சுமந்து வளத்தவ….!

அவங்க என்னை அம்மா-னு கூப்பிட்டதெல்லாம், என் காதுல இன்னும் ஒலிச்சுக்கிட்டே இருக்கு… எனக்கு அம்மாங்கிற தகுதியைக் குடுத்த என் புள்ளைங்க, கூடிய சீக்கிரம் திருந்தி வருவாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. நான் எங்க இருந்தாலும், எம்புள்ளைங்க தீர்க்காயுசோட, சௌக்கியமா இருக்கணும்… அதுதான் என் ஆயுசு முழுக்க, அந்த சாமிக்கிட்ட நான் கேக்கற வரம்.. என் பிரார்த்தனை எல்லாம்…

ஆதரவற்ற குழந்தைகள் இருக்கும் இல்லத்தில், ஏதெனும் வேலை கிடைத்தால் என்னை சேர்த்து விடுங்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால், எனக்கும் மனவேதனை குறையும். எனக்கும் வேலை செய்து சாப்பிடற திருப்திக் கிடைக்கும்! என்று சொல்ல, அவர் விருப்பப்படியே செய்தோம். இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்தாலும், அடிக்கடி நாங்கள் போய் அவரைப் பார்த்து வருவோம்.. மிகவும் இயல்பாக இல்லத்தில் தன்னை இணைத்துக்கொண்டு…. குழந்தைகளுக்குக் குளிப்பாட்டுவது, சமைப்பது, சிறு குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி சோறூட்டுவது, போன்ற வேலைகளைச் செய்து வரும் காவேரியம்மாவை நினைத்துப் பெருமையாக இருந்தது.

அங்கிருக்கும் குழந்தைகள் எல்லாம் “பாட்டி..பாட்டி” என அழைக்க, அவருக்கு தாங்க முடியாத ஆனந்தம்!… தாய் ஸ்தானத்தில் இருந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் வளர்த்தவரைத் துரத்தியடித்த பிள்ளைகளை, நாங்கள் ஏதாவது குறை சொல்லித் திட்டினாலும், எங்களைத் தடுத்து விடுவார், காவேரியம்மா.

“இந்தக் காலத்துல பெத்தவங்களையே புள்ளைங்க கவனிக்கிறதில்ல… நடுத்தெருவுல விட்டிர்றாங்க… நான் என்னா பெத்தவளா.. வளர்த்தவதானே.. அதுவும் அவங்க வூட்டு வேலைக்காரி..! எப்பவும் அவங்க எம்புள்ளைங்கதான்.. அவங்களத் திட்டாத தாயி.. எந்தக் குறையுமில்லாம அவங்க நல்லா இருக்கணும்கிறதுதான்… என்னுடைய பிரார்த்தனையே” என்பார் பெருந்தன்மையாக!

சொல்ல  மறந்து விட்டேனே.. இப்போது நன்றாகத் தமிழ் பேசக் கற்றுக் கொண்டு விட்டார், காவேரியம்மா. உடல், மனம் இரண்டும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். “எப்படி இருக்கீங்கம்மா?” என்று கேட்டால்… நல்லா இருக்கேன்… “குறை ஒன்றுமில்லை” என்பார் புன்னகையுடன்..!

இன்று அன்னையர் தினம்.! அகிலாவையும் அழைத்துக் கொண்டு போய், காவேரி அம்மாவைப் பார்த்து வணங்கி விட்டு வரவேண்டும்.! சுயநலமில்லாத அந்தத் தாய்மையில் கனிகிற இறைமையைத் தரிசிக்க வேண்டும்.

– கதைப் படிக்கலாம் – 30

இதையும் படியுங்கள் : காத்திருந்த கண்களே..!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கஞ்சாவும் துளசியும் ஒன்று தான் – நடிகை விளக்கம்..

Next Post

பெற்றோர் செய்த தவறு: 11 மாத தங்கையை தூக்கிப் போட்டு கொன்ற 5 வயது சிறுமி

Next Post

பெற்றோர் செய்த தவறு: 11 மாத தங்கையை தூக்கிப் போட்டு கொன்ற 5 வயது சிறுமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version