ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய மனுவுக்கு மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி ஆகியன பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி முன்னாள் அதிகாரி சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தவறான நிர்வாகம், வங்கி விதிகள் மீறல் காரணமாக 2016ம் ஆண்டு முதல் வீழ்ச்சியை சந்தித்துள்ள லட்சுமி விலாஸ் வங்கி, உண்மை தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை பொதுமக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வங்கியின் தவறான அணுகுமுறையால் 2017ம் ஆண்டு 2.67 சதவீதமாக இருந்த வங்கியின் வராக்கடன், கடந்த மார்ச் மாதம் 25.39 சதவீதமாக உயர்ந்து விட்டதாகவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, வங்கியில் 21 ஆயிரத்து 443 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த முதலீடுகள் உள்ளதாகவும், இந்த முதலீடுகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெலிகேர் நிறுவனம், 2016, 2017ம் ஆண்டுகளில் 750 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிலையில், ஆர்.ஹெச்.சி. ஹோல்டிங்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல், முதலீட்டாளர்களின் ஒப்புதல் இல்லாமல், ரிசர்வ் வங்கி விதிகளை பின்பற்றாமல் 720 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் 7 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய போது, 10 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக வங்கி தரப்பில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வங்கி யை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, எட்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.