ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் செல்லும் வழியில் மகிழம் பூக்கள் கொட்டிக் கிடந்தன. தங்கையன் சாலை வழியாக நடந்து வந்து தான் திருச்சிக்கு ரயில் பிடிப்பேன். இருசக்கர வாகனம் இருந்தாலும் நடந்து செல்ல ஒரு காரணம் இருக்கிறது.

பனி புகை போல விழுந்து கொண்டிருக்கும் அந்தக்காலைப் பொழுதில் யாரோ ஒருவர் பில்டர் காபி தயாரித்து இறக்கிக் கொண்டிருப்பார்கள். தெருவில் சாணம் தெளித்த ஈரநெப்பும், பிடித்து வைத்த சாணியில் பூசணிப் பூக்களும் மலர்ந்திருக்கும். அப்போது தான் அந்த ஷணத்தில் தான் அந்த பேரற்புதம் நிகழும்.
பஞ்சரத்ன கீர்த்தனை மனதிற்குள் நுழைந்து ஒவ்வொரு அணுக்களையும் ஆக்கிரமித்து உடலைப் பூப்பூக்க வைக்கும். கண்களை மூடிக்கொண்டு கேட்டால் நம் எங்கிருக்கிறோம் என்பதையே மறக்கச் செய்யும் வல்லமை கொண்டது.
ஜகதா நந்த காரக
ஜய ஜானகீ ப்ராண நாயக
ககநாதிபஸத் குலஜ ராஜ ராஜேஸ்வர
ஸுகுணாகர ஸுரஸேவ்ய பவ்யதா யக ஸதாஸகல
ஸஸநிபா, பப-ஸஸரிஸ ஸமமரி/ஸமமா;பா/;பமமபமமரீ// ஸமரிஸஸ – நிபாப மமபா/ஸர்ஸ்நிநிஸநிநி/ஸநிபாரிஸநிப// ஸநிபமா நிபமரீ பமரிஸா/பபா ஸாஸ நிப/மரிஸாமகம// (ஜ..)
அமரதா ரக நிசயகு முதஹித/பரிபூர்ணாநகஸுரஸுரபூ ஜத திபயோ திவாஸ ஹரண/ஸுந்தரதர வதனஸுதாமயவசோ// ப்ருந்தகோ விந்தஸா நந்தமா/வராஜராப்தசுபகராநேக// (ஜ..)
ஷேக் சின்ன மௌலானா வீட்டிலிருந்து கசிந்தோடும் அந்த நாதஸ்வர இசையில் உயிர் ஒன்று கலந்திருக்கும். சர்வ நிச்சயமாக சொல்லி விட முடியும், அந்த உயிரிசையை வாசித்துக் கொண்டிருப்பது மெகருன்னிசா தான்.

சரளியில் ஆரம்பித்து ஜெண்டை, வர்ணம், அலங்காரம் என நீண்டு முடியும் போது மனமும் உடலும் ஆகாசத்தில் மிதந்து கொண்டிருக்கும். அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்கும் அலுப்பே இருக்காது.
மெகருன்னிசா. தங்கமும், வெண்ணையும் உருக்கி செய்யப்பட்ட இசை சரஸ்வதி. பெண்கள் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் அதுவும் இஸ்லாமியக் குடும்பத்தில் இருந்து என்கிற செய்தியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நான் பணி மாற்றலாகி ஸ்ரீரங்கத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. பெரும்பாலான அதிகாலைகள் இந்த இசைக்காகவே விடியும். எனக்குத் தனியாக இசை கேட்டு எந்தப் பழக்கமும் இல்லை. ஆனால் சமீபத்தில் இந்த இசை எனக்குள் ஏதேதோ மாயங்களை நிகழ்த்துகிறது.
திருச்சியில் ஒரு மாலைப் பொழுதில் மெகருன்னிசாவின் கச்சேரி நடைபெற்றது. ஷேக் சின்ன மௌலானாவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “மெகருன்னிசாவிடம் பேச வேண்டும்” என்றேன்.
“தாராளமாய் போய்ப் பேசுங்கள்” என்றார். அவர் மெகருன்னிசாவின் தற்போதைய குரு என அறிந்து கொண்டேன். டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் ரிக்கார்டிங்குகள், திருவீழிமலை சகோதரர்கள், குளிக்கரை பிச்சையப்பா போன்றோர்களிடம் கற்றுத் தேர்ந்தவராம் அவர்.
மெகருன்னிசாவைப் பார்த்து “வாழ்த்துகள்” சொன்னேன். “நன்றி” என ஏற்றுக் கொண்டார். தன் கணவரை அறிமுகப்படுத்தி வைத்தாள். ஒரே துறை சார்ந்து இயங்கும் போது ஏற்படும் சௌகர்யங்களும் அசௌகர்யங்களும் அவர்களிடமும் இருந்தன. எனக்கு வணக்கம் வைத்தார். நானும் பதில் வணக்கம் சொல்ல ஏற்றுக் கொண்டார்.
“தினமும் உங்கள் வீட்டைத் தாண்டித் தான் என் அலுவலகத்திற்கு செல்வேன். உங்கள் ஆலாபனையை கேட்டு விட்டே ரயிலேறுவேன்” என்றேன்.
ஆத்மார்த்தமான புன்னகை ஒன்றை உதிர்த்த மெகருன்னிசா “ஒருமுறை வீட்டுக்கு வாங்களேன்” என்றாள்.
“அது என் பாக்கியம். ஒரு நாள் என்ன ஒருநாள்.. நீங்கள் அனுமதித்தால் நாளையே வருகிறேன்” என்றேன்.
ஒரு கணம் அதிர்ந்த மெகருன்னிசா, சிரித்துக் கொண்டே, “சரி வாங்க” என்றார்.
இசைக்காகவே அளவெடுத்து செய்தது போல இருந்தது அந்த வீடு. காற்றின் ஒவ்வொரு மாலிக்யூலிலும் இசை கலந்திருந்தது.
சாதகம் நடந்து கொண்டிருந்தது. யாரையும் தொந்தரவு செய்யாமல் போய் அமர்ந்து கொண்டேன். பெண்ணொருத்தி எனக்கு தேநீர் தந்து விட்டுப் போனாள். காபி குடித்தே பழக்கமான எனக்கு அந்த தேநீரும், இசையும் புது உலகை விரித்துக்கொண்டிருந்தது.
ஷேக் சின்ன மௌலானா அந்தப்பயிற்சியில் தன்னைக் கரைத்து ஒரு தியானம் போல அதைத் தனதாக்கிக் கொண்டிருந்தார்.
ஆலாபனை செய்து பழகும் தருணங்களை காணக் கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்னைப் போலவே.
நானும் மெகருன்னிசாவும் நல்ல நண்பர்களாகி இருந்தோம். அவர்களது குடும்ப உறுப்பினர்களில் நானும் ஒரு ஆளாகி இருந்தேன்.
அன்று கச்சேரிக்கு தயாராகிக் கொண்டிருந்த போது நான் தான் கேட்டேன்.
“ஏன் மெகு, நீ பொட்டு வைப்பதே இல்லை?”
லேசாக சிரித்தவள், “எங்கள் மார்க்கத்தில் தான் அந்தப் பழக்கமில்லையே” என்றாள்.
“உனக்கு பொட்டு வைத்தால் அழகாக இருப்பாய்” என்றேன்.
“அப்பிடியா?” என்றவள் தன் கையிலிருந்த கண்ணாடியைப் பார்த்து சிரித்துக்கொண்டாள்.
“நீ ஆட்சேபிக்கவில்லை என்றால் நானே உனக்கு வைத்து விடுகிறேன்” என்றேன்.
ஒரு கணம் என்னை பார்த்தாள், அதைப் பயன்படுத்திக் கொண்டேன். “மங்கள இசை வாசிக்கிறவள் நீ. உன் நெற்றி வெறுமையாய் இருப்பது நன்றாக இல்லை என என் காதுபடவே கச்சேரிகளில் பேசுகிறார்கள்” என்றேன்.
தீர்க்கமாய் என்னைப்பார்த்தவள், “என் இசை அவர்களை முழுமையாகச் சென்றடைந்து விட்டால், மற்ற எதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஆக இன்னும் நான் பயிற்சி எடுக்க வேண்டும் போல” என்று சொல்லி கலகலவென சிரித்தாள்.
அவள் சிரித்து முடிக்கும் தருணத்தில் அவள் நெற்றியில் குங்குமப் பொட்டை வைத்து விட்டிருந்தேன்.
அவள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் கண்ணாடியைப் பார்த்தாள். “அழகாய்த்தான் இருக்கிறேன் போல. ஆனால் நிச்சயம் அவர் கோபித்துக் கொள்வார்” என்றாள்.
“அவரிடம் நான் பேசிக் கொள்கிறேன்” என்றேன்.
அந்தக் கச்சேரியில் வழக்கத்தை விட சிறப்பாகவே வாசித்தாள் மெகருன்னிசா. பின் பொட்டு வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

ஒரு நாள் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு எப்படி அவர்கள் திருச்சிக்கு வந்து சேர்ந்தார்கள் என்பது பற்றி திரும்பியது.
ஷேக் சின்ன மௌலானா எப்படி தங்களுக்கு குருவாக கிடைத்தார் என ஒருமுறை சொன்னாள்.
திருவையாறில் வாசிக்க வேண்டும் என்பது அனைத்து வித்வான்களுக்கும் கனவு. லட்சம் மக்கள் கூடும் அவ்விடத்தில் இசை சக்ரவர்த்திகளுக்கும் பஞ்சமிருக்காது. அங்கு வாசிப்பதற்கு வாய்ப்புக் கேட்ட போது வாய்ப்பும் நேரமும் இருந்தால் தருகிறோம் என சொல்லி விட்டார்கள். தினமும் கச்சேரியை தவற விடாமல் மெகருன்னிசாவும் அவளது கணவரும் சென்று வந்தனர். திடீரென ஒருநாள் அந்த செகரட்டரி வாசிக்கிறீர்களா என கேட்டார். நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக் கருவிகளை அறையிலே வைத்து விட்டு வந்து விட்டார்கள்.
திடீரென கேட்டவுடன் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஷேக் தன்னிடமிருந்த நாதஸ்வரத்தை வாசிப்பதற்காக அவர்களுக்கு கொடுத்தார்.
அதை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இதெல்லாம் எங்குமே நடக்காத அதிசயம். அவருடைய நாதஸ்வரத்தை வாங்கி தொட்டு வணங்கி வாசிக்க ஆரம்பித்தார்கள். அன்றைய நாள்மறக்க முடியாததாக இருந்தது.
இன்னும் கற்றுக் கொள்ள இருந்து கொண்டே இருக்கிறது என அவரை குருவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
இதைக் கேட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“இன்னும் ஒரு நாளில் திருவையாறில் நீ வாசிக்கப் போகும் நாளில் முதல் வரிசையில் நான் இருப்பேன் மெகு.”
கண்களில் ஒளிமின்ன புன்னகைத்தாள் மெகு. ஆனாலும் மெகுவின் கண்கள் எதையோ மறைத்து வைத்திருந்தன.
“நிறைவேறாத ஆசைகள் என உனக்கு எதாவது இருந்தால் சொல் மெகு. நிறைவேற்றி வைக்கிறேன்” என்றேன்.
“அது உன்னால் முடியாது” என்றாள்.
“அப்படி என்ன ஆசையாம் அது?”
“உன்னால அது முடியாது கவிதா” என்றாள்.
“சரி சொல். கேட்காவது செய்கிறேன்” என்றேன்.
“எத்தனையோ கச்சேரிகள் எந்தெந்தெந்த நாட்டிலெல்லாம், கோவில்களிலெல்லாம் வாசித்திருக்கிறேன். பத்து வருசத்துக்கு மேல ஸ்ரீரங்கத்துல இருக்கோம். இன்னும் இங்க இருக்கிற கோயில்ல வாசிக்க எங்கள கூப்பிடவே இல்லை.”
-சொற்கோ
இதையும் படியுங்கள் : சிறுகதை – தீராச்சுமை!




