விவசாயிகளுக்கான ஆதரவாக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தால் தமிழகம் கருப்பு கடல் ஆகட்டும் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, அவை வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதால், நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றில், மத்திய அரசின் இந்தத் திருத்தச் சட்டங்களை ஏற்கமாட்டோம் எனச் சட்டப்பேரவைத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
தமிழ்நாட்டிலோ வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவற்றை நிறைவேற்றிக் கொடுத்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தனர். தி.மு.க. சார்பில் இந்தத் திருத்தச் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டெல்லி போராட்டம்
மோடி அரசு இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளைநிலங்களைத் தாரை வார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வதிலேயே குறியாக இருக்கிறது.
பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் இந்திய தலைநகரை முற்றுகையிடும் வகையில், ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நடத்தி, லட்சக்கணக்கான வாகனங்களில் இந்தியத் தலைநகரில் தொடர் முற்றுகைப் போராட்டதை கடுங்குளிரிலும் மேற்கொண்டு வருகிறார்கள்.

கருப்பு கடல் ஆகட்டும்
நாளை தி.மு.க. சார்பில் மத்திய – மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தத் திருத்தச் சட்டங்களை எந்த அடிப்படையில் பழனிசாமி ஆதரிக்கிறார்? தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும் தார்மீக ஆதரவு தரும் வகையில் திமுக நடத்தும் கருப்புக் கொடி அறப்போராட்டத்தில் சேலத்தில் பங்கேற்கிறேன்.ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட, கருப்புக் கொடிகள் உயரட்டும். தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும். டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




