தன்னை அறிக்கை நாயகர் என்று விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஊழல் நாயகர் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் போய் எடுத்து பேசினால், முதலமைச்சருக்கு மிகவும் கோபம் வருகிறது – ஆத்திரம் வருகிறது. ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலையே இல்லை எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்’ என்கிறார். நாங்கள் அரசியல் செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய நான் அதைத்தான் செய்ய முடியும்.
அவர் செய்து கொண்டிருக்கும் ஊழலையெல்லாம் ஆதாரத்தோடு நாங்கள் பல்வேறு கூட்டங்களில் எடுத்துச் சொல்கிறோம்; அறிக்கையிலும் வெளியிடுகிறோம். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘அறிக்கை விடுவது அவரது வேலையாக போய்விட்டது. காலையில் ஒரு அறிக்கை – மாலையில் ஒரு அறிக்கை – இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்’ என்று சொல்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் வேலையே அதுதான்! ஆளும்கட்சி என்னென்ன தவறு செய்கிறதோ, அதனைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்துவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலை” என்று தெரிவித்தார்.
மேலும், “அதுமட்டுமில்லாமல் எனக்கு பெரிய பட்டத்தையும் கொடுத்து இருக்கிறார். அது என்னவென்றால், நான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி ‘அறிக்கை நாயகர்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார். மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அறிக்கை விடுவது தவறில்லை! எனவே, முதலமைச்சர் அந்தப் பட்டத்தை பெருந்தன்மையோடு கொடுத்திருக்கிறார். அதனை நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்கிறேன்.
எனக்கு பட்டம் கொடுத்துள்ள அவருக்கு நான் ஒரு பட்டம் கொடுக்க வேண்டாமா.ஊழல் நாயகர்’ – ‘கரப்ஷன் நாயகர்’ – ‘கமிஷன் நாயகர்’ – ‘கலெக்ஷன் நாயகர்’ இதுதான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நான் தரக்கூடிய பட்டம்” என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லோருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு கொள்கைகளை அறிவிக்கட்டும். அதற்குப் பிறகு அதுபற்றி என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன்” என்றார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவாதத்திற்கு நான் வருகிறேன், முதலமைச்சர் வரத் தேவையில்லை என்று கூறியிருக்கிறாரே எனக்கேட்க, “அவர் ஒரு பபூன். அவரைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை” என விமர்சித்தார் ஸ்டாலின்.