இந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் தேர்வு எளிமையாக இருக்கும்படி அமைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை துவக்க முடியாமல் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவங்கப்பட்டன. கடந்த முறை கொரோனா அச்சத்தால் ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
பல மாநிலங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள தேதி குறித்த விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே அது வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் மாணவர்களின் சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா காரணாமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் குறித்து, முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.