இந்தி திணிப்பை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், கடந்தக்கால ஆட்சியில், காங்கிரஸ் கட்சியே இந்தியை திணிக்க முயற்சி செய்ததாகவும் நேற்றுக் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசியல் நிர்ணய சபையில், இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்ட நிலையிலும், எவ்வளவு காலம் ஆங்கில மொழி ஆட்சி மொழிக்குரிய அந்தஸ்துடன் நீடிப்பது என்பது குறித்தே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன.
நீண்ட விவாதங்களுக்குப் பிறகே, இந்தப் பிரச்சனைக்கு தமிழகத்தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார் மற்றும் மும்பையைச் சேர்ந்த கே.எம்.முன்ஷி ஆகிய இருவரும் சமர்ப்பித்த சமரச திட்டத்தின் மூலம், 1949ல் தீர்வு காணப்பட்டது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி மொழி இருக்கும் எனவும், மேலும் ஆங்கிலம் 15 ஆண்டுகாலம் வரை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், 1959ல் பிரதமர் நேரு, எந்தக் காலத்திலும் மொழி திணிப்புக் கிடையாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆங்கிலம் எவ்வளவு காலத்திற்கு ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதை இந்திப் பேச அறியாத மக்கள் தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, வேறு யாருக்கும் அதைப் பற்றி முடிவு செய்வதற்கு உரிமை இல்லை. எனவே, இந்திப் பேசாத மக்கள் விரும்பும் வரை, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியும், ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியது, நாடாளுமன்ற பதிவேடுகளில் இன்றும் இருப்பதைக் காணலாம்.
மேலும், 1960லும் பிரதமர் நேரு எழுதிய கடிதத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியை மீண்டும் உறுதிப்பட கூறியிருந்தார்.இன்றைக்கும் இந்தி பேசாத மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக இருப்பது நேரு 1959, 1960-களில் வழங்கிய உறுதிமொழிகள்தான் என்பதை தமிழக முதலமைச்சர் உணரவேண்டும். எனவே, காங்கிரஸ் என்றைக்குமே இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.




