தமிழகத்தில் ஆறாவது முறையாக தி.மு.க.வை அரியணையில் ஏற்ற சூளுரைப்போம் என்று தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சமூக வலைதளத்தில் காணொலி மூலமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
இந்த இரண்டு ஆண்டுகளைக் கடந்ததே, இரண்டு யுகங்களைக் கடந்தது போல இருக்கிறது. எனது கண்களில் படுவது அனைத்தும் கருணாநிதி பிம்பமாகவே தெரிகிறது. 5 முறை முதலமைச்சர். ஐம்பது ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். இந்தப் பதவிகளை வைத்து வாழ்ந்தவர் அல்ல, தமிழ்நாட்டை வாழ வைத்தவர். அவர் செய்த சாதனைகளின் மூலமாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு அவருடைய பெயர் இந்த நாட்டில் நினைவு கூரப்படும்.
அவர் பிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர். எப்படிப் பார்த்தாலும், அவர் ஒரு சகாப்தம். இந்த இரண்டாண்டு காலத்தில் ஏராளமான வெற்றியைப் பெற்றுள்ளோம். சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கழகத்தின் வலிமை உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கழகம் அமர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். டெல்லி நாடாளுமன்றம் முதல், குக்கிராமத்து ஊராட்சி வரைக்கும் கழகத்தவர் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. இனத்துக்கு ஒரு இடைஞ்சல் என்றால், மொழிக்கு ஒரு தடங்கல் என்றால் முதல் குரல், நம் குரல் தான். கழகத்தை வீழ்த்த வீண் அவதூறுகளையும், பொய்ப் புகார்களையும் புனை கதைகளையும் பரப்பி வருகிறார்கள். நாட்டுக்காக நாங்கள் தீயைத் தாண்டிக் கொண்டு இருக்கிறோம்.
ஆறாவது முறையாய் கழகத்தை அரியணை ஏற்ற உங்கள் நினைவுநாளில் சூளுரை ஏற்கிறோம். மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் என ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் சளைக்காமல் மோதிக் கொண்டு இருக்கிறோம் என அவர் பேசினார்.