கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் விமானி, துணை விமானி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து சுமார் 191 நபர்களுடன் கேரள, கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்திய விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியதில், விமானி உள்பட பலர் உயிரிழந்துள்ளதாகவும், பெரும்பாலான பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் வந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். இவ்விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர் என்ற செய்தியை அறிந்தேன். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்ன் என அவர் பதிவிட்டுள்ளார்.




