பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது .

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனம் தனித்துவமான ஸ்போர்ட்ஸ் ரக பைக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பைக் வர்த்தகத்தை துவங்கியது.

இந்தியாவில் முதலாவதாக ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு பைக் மாடல்களை களமிறக்கியது. ஸ்டைலான டிசைன், கேடிஎம் எஞ்சின் என்பதுடன் விலை மிக சரியாக நிர்ணயிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த இரண்டு மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ஸ்வர்ட்பிளேன் வரிசையிலான பைக் மாடல்கள் ஸ்க்ராம்ப்ளர் ரகத்திலும், விட்பிளேன் வரிசை மாடல்கள் கஃபே ரேஸர் டிசைனிலும் கிடைக்கின்றன.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், தனது மாடல்களை இந்திய இளைஞர்கள் நிச்சயம் விரும்புவர் என்று ஆணித்தரமாக கருதுகிறது. மேலும், முதலாவதாக களமிறக்கப்பட்ட 250 சிசி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதை மனதில் வைத்து அடுத்து தனது ஸ்வர்ட்பிளேன் 401 பைக் மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்த பைக் மாடல் இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இந்த பைக் ஸ்போக்ஸ் சக்கரங்களுடன் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மாடலானது அலாய் வீல்களுடன் இருக்கிறது. ட்யூப்லெஸ் டயர் பொருத்துவதற்காக அலாய் வீல்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.

கேடிஎம் 390 பைக் மாடல்களில் இருக்கும் அதே 373சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக்கில் இடம்பெறும். இந்த எஞ்சின் 43.5 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.