ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்காக மட்டுமே பயன்பட்டு வந்த போக்குவரத்து சாதனங்கள் இப்போது ஆடம்பரத்தின் அடையாளங்களாக மாறியுள்ளது.
இதற்காக சிலர் கோடிக்கணக்கில் செலவு செய்யவும் தயங்குவதில்லை. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்காக சொகுசு விமானத்தையே விஞ்சும் வகையில் ஒரு வாகனம் உருமாறி வருகிறது. அதைப்பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்…
சாதாரணமாக ஒரு காரின் விலையே பல கோடிகள் இருக்கிறது இப்போது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான ரோல்ஸ்ராய்ஸ், பென்ஸ், ஆடி, வோல்க்ஸ்வேகன், லம்போகினி உள்ளிட்ட பல நிறுவனங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப சொகுசு அம்சங்களை தங்கள் கார்களில் அமைத்துத் தருகின்றனர். அதே போல் பாதுகாப்பு விசயங்களுக்கும் இந்த நிறுவனங்கள் முக்கியத்துவம் தருகின்றன.
ஆனால் சாதாரண விலையில் கிடைக்கும் கார்களையும் சில தனியார் நிறுவனங்கள் சொகுசு வாகனங்களாக மாற்றித் தரும் வேலையை கச்சிதமாக செய்து தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி Vehicle Modification நிறுவனமான கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் டிசைன்ஸ் என்ற நிறுவனம் தமிழத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்காக ஃபோர்ஸ் டிராவலர் வாகனத்தை சொகுசு விமானத்திற்கு இணையாக மாற்றி வடிவமைத்துள்ளனர். அந்த பிரபலம் யார்? எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அந்த வாகனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள அம்சங்கள் நம்மை வாயடைக்க வைக்கிறது. அந்த வாகனத்தின் உடபுறத் தோற்றம் நம்மை பிரம்மிக்க வைக்கிறது .
அந்த மினி வேனின் உட்பகுதி முழுவதுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேனில் ஓட்டுநர் இருக்கையைத் தவிர உட்புறத்தில் இருந்த இருக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கின்றன. பிறகு வேனின் உட்பகுதி மேல்புறம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மினி வேன் ஒரு நடமாடும் அலுவலகமாகவே மாற்றப்பட்டுள்ளது. படுக்கையைப் போல் மிக அதிகளவில் சாயும் தனி இருக்கைகள் மற்றும் இருவர் சொகுசாக படுத்து உறங்குகின்ற வகையில் படுக்கை அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த படுக்கையை தேவைப்பட்டால் இருக்கையாக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் இடத்தை அடைக்காமல் ரயில் இருக்கையைப் போல் மடித்து வைத்துக்கொள்ளவும் முடியும். இத்துடன், டிவி, ஃபிரிட்ஜ் மற்றும் எலக்ட்ராணிக் கதவுகள் உள்ளிட்டவையும் இந்த மினி வேனில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், விமானத்தின் உட்பகுதியைப் போல் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக வேனின் ரூஃப் மற்றும் தரை பகுதிகளில் பாலிஷ் செய்யப்பட்ட மரப்பலகை, ஆடம்பரத் துணி மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன், கப்போர்ட்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் இடம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக, ஸ்பிளிட் ஏசி, ஜெனரேட்டர், இன்வெர்டர், சோனி மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த வேனில் வழங்கப்பட்டிருக்கின்றன. வேன் நிறுத்தபட்டிருக்கும் போது அலுவலகமாக இயங்க வேண்டியிருந்தால் வாகனத்தை ஓட விடத் தேவையில்லை. அதற்காகத்தான் வேனின் வெளிப்புற பக்கவாட்டில் ஜெனரேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. வேனை ஓடவிட்டு ஏசியை பயன்படுத்தினால் எரிபொருள் செலவு அதிகமாகும் என்பதால் இந்த ஏற்பாடு. ஜெனரேட்டரில் ஏதாவது பிரச்னை என்றால் இன்வெட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், வேனின் உட்புறத்தில் மட்டுமின்றி வெளிப்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, வேனின் வெளிப்புறத்திற்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும் விதமாக கார்களில் பயன்படுத்தக் கூடிய ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கிறது. இதற்காக ஹோண்டா சிவிக் காரின் முகப்பு விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், முகப்பு பகுதி பம்பர் மற்றும் கிரில் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. இதே போல் அலாய் வீல், சஸ்பென்ஷன் மற்றும் வேனின் பின்பகுதி ஸ்டைல் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டுள்ளது. பயணத்தின் போது சொகுசான அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஃபோர்ஸ் வேனில் வரும் பிளேட் சஸ்பென்சன் நீக்கப்பட்டு ஏர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. வேனின் வெளிப்புறத்தில் தனித்தனி ஜன்னல் கண்ணாடிகள் நீக்கப்பட்டு வால்வோ பேருந்துகளில் உள்ளதைப் போல் ஒரே கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வேனின் வெளிப்புறம் மிகவும் ராயலான லுக்கைத் தருகிறது. இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்காகவே செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் யார்? இந்த மினி வேனை கட்டமைப்பதற்கான செலவு உள்ளிட்டவை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதன் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி மக்களை வாயடைக்கச் செய்துள்ளது. காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா. . . . இந்தப் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. காசு கையில் இருந்தால் கழுதையும் குதிரையாகும் என்பது உண்மைதான். சாலையில் ஓடும் வாகனத்திற்கே பல லட்சம் ரூபாய் செலவு செய்ய நம் தமிழகத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். அதே போல் சாலையையே வீடாகக் கொண்டும் வாழும் அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னத்த சொல்ல….
-சுரா