நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் இன்று வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை
‘கொரோனா’ வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது, பல்வேறு துறைகளுக்கான கடனுதவி அளிப்பது உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, பெரிய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, இன்று(ஜூலை 29) ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்பட பல்வேறு துறைகளுக்கு கடன் வசதி உள்ளிட்ட, 20.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.’நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாக, வங்கித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.