இந்தியாவில் தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் 47% மருந்துகள் மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழகமும், டெல்லியில் உள்ள இந்திய சுகாதார அமைப்பும் இணைந்து தனியார் நிறுவனங்களின் நோய் எதிர்ப்பு மருந்துகள் குறித்து ஆய்வு நடத்தின. இதையடுத்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
*5 ஆயிரம் நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களை சேர்ந்த 9 ஆயிரம் மொத்த விற்பனையாளரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
*இந்தியாவில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் 85-90% மருந்துகள் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.
*இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் அதிக அளவிலான நோய் எதிர்ப்பு மருந்தாக அசித்ரோமைசின் 500 மிகி, 7.6%மும், செபிக்சிம் 200 மிகி 6.5%மும், பயன்படுத்தப்பட்டுள்ளது.
*தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகளில் 47.1% மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுதுறை ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளன.
*இதில், அரசு மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் விநியோகிக்கப்பட்ட மருந்துகளை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.