பிரபல ஓலா கால் டாக்ஸி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. காரணம் என்ன பார்க்கலாம்.
இந்தியாவில் பிரபலமாக இருந்து வரும் ஆன்லைன் கால் டாக்ஸி நிறுவனம் ஓலா. இந்த நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க போவதாக அறிவித்து முன்பதிவுகளை தொடங்கியது. இந்தியாவில் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தாங்கள் தயாரித்து வரும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாடல்களையும் வெளியிட்டது ஓலா.
இந்த அறிவிப்பின்போது செப்டம்பர் 8ம் தேதி முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சொன்னபடி நேற்று இந்த விற்பனை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ள ஓலா நிறுவனம் சில காரணங்களால் 8ம் தேதி விற்பனையை தொடங்க முடியவில்லை என்றும், கண்டிப்பாக செப்டம்பர் 15 அன்று இ-ஸ்கூட்டர்களின் விற்பனை தொடங்கும் என்றும், காலதாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் என்றும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.