நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி சார்பில் தயாரிக்கப்பட்ட படம் வணங்கான். வித்தியாசமான கதைக்களத்தோடு களமிறங்கும் பாலாவின் படத்திற்கு எப்போதும் எதிர்பார்ப்பிற்குப் பஞ்சமிருக்காது. பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் பாலாவோடு பணியாற்றிய சூர்யா இந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்ற நிலையில் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இயக்குநர் பாலாவிற்கும், சூர்யாவிற்கும் முட்டிக் கொண்டது. அப்படத்தில் இருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பாலாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து அதே கதையில் நடிகர் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். நாயகி தேர்வு இழுபறியாக இருந்த நிலையில் ஏமாளி, ஜடா போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகை ரோஸினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படமானது முதல் கட்டப்படப்பிடிப்பாக 25 நாட்கள் நடைபெற உள்ளது.