நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியால் +1ல் தேர்ச்சி பெற்ற இருவருக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராகவா லாரன்ஸ் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவர். அதேசமயம், அவர் ஆற்றி வரும் வரும் பொதுச்சேவைகளும் அவருக்கு என தமிழகத்தில் நன்மமதிப்பையும், சிறந்த அடையாளத்தையும் வழங்கியுள்ளது.
தனது அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்காக கல்வி, மருத்துவம் மற்றும் அடைக்கலம் போன்ற பல்வேறு நலத்திட்டப்பணிகளை லாரன்ஸ் செய்து வருகிறார். அவரது, உதவியால் ஆதரவற்றோர் பலரும் இன்று வாழ்வில் நல்ல நிலையை எட்டியுள்ளனர். கொரோனா சமயத்திலும் கூட மத்திய, மாநில அரசுகளுக்கு என நிதியை வாரி வழங்கிய லாரன்ஸ், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு என தனிப்பட்ட முறையில் உதவிகளை செய்தார்.
இந்நிலையில், சிறு வயதில் ஆதரவின்றி தன்னிடம் வந்த இருவர் தற்போது பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் மகிழ்ச்சியை, லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், என்னுடைய உடல் நலம் மற்றும் ஒரு சில காரணங்களால் என்னால் சிறு வயதில் படிக்க முடியாமல் போனது. அதன் காரணமாக நான் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானேன். என்னுடைய நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஏழை எளிய குழந்தைகள் படிக்க என்னால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த இரு குழந்தைகளும் என்னிடம் சிறுவர், சிறுமிகளாக இருக்கும்போது வந்தார்கள். தற்போது 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளார்கள். உங்கள் அனைவருடைய ஆசியும் இந்த குழந்தைகளுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, லாரான்ஸின் உதவும் குணத்தை பலரும் பாராட்டும் நிலையில், +1 தேர்வில் தேர்ச்சி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.